எழுத்தாளர் இமையத்திற்கு, தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையத்திற்கு, 2018-ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் ’இயல்’ விருது வழங்கப்படுவதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தமிழில் இதற்கு இணையாக நாவல் இல்லை” என்று அவரது முதல் நாவலான “கோவேறுக் கழுதைகள்” நூலை தமிழின் முன்னோடி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி விமர்சித்திருக்கிறார். இந்நாவல் Beasts of Burden என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.
‘இலக்கியப் படைப்பு என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளை சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன். நான் சரியாகவும், முழுமையாகவும் சமூக இழிவுகளை பதிவு செய்திருக்கிறேனா என்பதில்தான் என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின் அடிப்படையே அதுதான்.’ என்கிறார் இமையம்.