முக்கிய செய்திகள்

சென்னை அண்ணா சாலையை மறிக்க முயன்ற அரசு ஊழியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு…


ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தைத் தடுத்துநிறுத்த, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று அரசு சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், நேற்று முதல் காவல் துறையினர், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளைக் கைதுசெய்துவருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நிர்வாகிகள் நேற்று கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று சென்னை முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில், மாநில காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜார்ஜ் கோட்டைக்குச் செல்லும் வழியையும் காவல்துறையினர் மறித்துள்ளனர். கடுமையான சோதனைகளுக்குப் பிறகே, வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இதனிடையே சென்னை அண்ணா சாலையை மறிக்க முயன்ற அரசு ஊழியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் நடத்தும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.