ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறி கடிதம் எழுதியது தொடர்பான விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.
அதில் “தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா, மிகவும் நெருக்கமானவர். சந்திரபாபு நாயுடு ஆட்சியில், அமராவதியில் நில அபகரிப்பு முறைகேடு நடந்தது. அதில், நீதிபதி ரமணாவின் இரண்டு மகள்களுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. எனினும், அந்த வழக்கு விசாரணையை முடக்க, உயர் நீதிமன்றம் வாயிலாக, ரமணா முயற்சித்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மஹேஸ்வரி செயல்பட்டு வருகிறார். சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியினருக்கு எதிராக, பல ஊழல் வழக்குகள் உள்ளன.
உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ரமணா ஆதிக்கம் செலுத்துவதால், முக்கிய வழக்குகள், குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. ஒய்.எஸ்.ஆர்., காங்., அரசின் முக்கிய முடிவுகளுக்கு எதிராக, பல உத்தரவுகளை, உயர் நீதிமன்றம் தொடர்ந்து பிறப்பித்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீதும், அடுத்த தலைமை நீதிபதியாக வர இருப்பவர் மீதும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, பல்வேறு வழக்குகளைச் சந்தித்து வரும் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொது நலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “ சட்டவிரோதப் பணபரிமாற்ற வழக்கு, ஊழல் வழக்குகள் என 20-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து வருகிறார். அனைத்துமே மிகவும் தீவிரமான வழக்குகள்.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுகளுடன் முதல்வராக இருந்து கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.வி. ரமணா மீது எந்தவிதமான அடிப்படை ஆதாரங்கள் இன்றி குற்றச்சாட்டு கூறிய ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைளை உடனடியாக எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் தனது அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி, பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தனது அரசியல் ஆதாயத்துக்காக நீதிபதி மீது கூறுகிறார்.
அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகள் ஒரு நீதிபதி மீது கூறுவது என்பது மக்கள் மத்தியில் நீதித்துறையின் தோற்றத்தையும், மதிப்பையும் களங்கத்துக்குள்ளாக்கும்.
ஆதலால், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அல்லது ஜெகன்மோகன் ரெட்டி கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.