தமிழகத்தின் மிகப்பழமையான திருவிழா ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு.
ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அது வீர விளையாட்டு என்பது தான். அது வீரவிளையாட்டு என்பதைவிட அது விவசாயிகளின் திருவிழா என்பதுதான் சரியானது.
வருடா வருடம் அறுவடைக்குப்பின் கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கும், அறுவடைக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு தமிழக கிராமங்கள் தோரும் பண்டைகாலம் முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டை, மஞ்சுவிரட்டு,வடமாடு,எருதுகட்டு, மாட்டு வேடிக்கை என பல்வேறு பெயர்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த திருவிழாவை விவசாயிகள கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இந்த திருவிழாவை மஞ்சுவிரட்டு என்று அழைக்கிறார்கள்.
இது மிகப்பெரிய கோயில்கள் சம்பந்தப்பட்ட திருவிழா அல்ல.கிராமங்களில் காவல் தெய்வங்களாக மரத்தடியிலோ ஊருக்கு வெளிப்புறத்தில் குளக்கரையிலோ, ஆற்றங்கரையிலோ அமைந்துள்ள காவல் தெய்வங்களுக்கு அந்தந்த கிராம பொது மக்களால் கொண்டாடப்படும் திருவிழா இந்த மஞ்சுவிரட்டு..
பெரும்பாலும் அந்த தெய்வங்கள் அம்மன் தெய்வமாகவோ, கருப்பர்,முனியாண்டி,அய்யனார் என்ற பெயருடைய தெய்வங்களாகவோ இருப்பார்கள்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் சில இடங்களில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூட தங்கள் கோயில் திருவிழாக்களில் இந்த மஞ்சுவிரட்டு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
கிராமத்தின் காவல் தெய்வங்களின் கோவில்கள் கட்டட அமைப்பில் இருப்பதில்லை அவை பெரும்பாலும் மரத்தடியில் சூலாயுதம் அமைப்புடனும், அருவா அமைப்புடனும் அல்லது உருவமற்ற கல்லாகவும் வைக்கப்பட்டு கிராமத்தினர் வணங்கி வருகின்றனர்..
ஆனால் அதேவேளையில் அதனருகிலேயே கட்டட அமைப்பில் மஞ்சுவிரட்டு தொழுவங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் தமிழகம் முழுவதும் கிராமங்களில் காணலாம்.
மஞ்சுவிரட்டானது விவசாயம் முடிந்த ‘தை’ மாதம் தொடங்கி அடுத்த விவசாயத்திற்கு தயாராகும் ‘ஆனி’மாதம் வரை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் அந்த கிராமத்திற்கு முக்கியமாக உள்ள ஒரு காவல் தெய்வத்திற்கு அருகே மஞ்சுவிரட்டு தொழுவங்கள் அமைக்கப்பட்டுள்ளதை இன்றும்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காண முடியும்.
திருவிழா அன்று கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி,அவற்றை மஞ்சுவிரட்டு தொழுவத்தில் வைத்து அங்கு ஊர்கூடி பொங்கலிட்டு, அவற்றையும், காவல் தெய்வத்தையும் வணங்கி கால்நடைகளுக்கு மாலைகள்,துண்டுகள் அணிவித்து அவற்றை அங்கிருந்து அவிழ்த்துவிடுவது இன்றுவரை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் வருடாவருடம் இந்த திருவிழா நடப்பதற்கு எட்டு நாட்களுக்கு முன்பு ஊர்மக்கள் ஒன்றுகூடி “காப்புக்கட்டு” என்ற நிகழ்வை செய்து இந்தத் திருவிழாவை தொடங்குகின்றனர்.
காப்பு கட்டுதல் தொடங்கியதிலிருந்து அந்த திருவிழா முடியும் வரை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும் வெளியூரில் சென்று இரவு தங்குவதில்லை எந்த வேலையானாலும் இரவு கிராமத்திற்கே திரும்பி விடுவார்கள்.
அதேபோன்று அந்த கிராம முக்கியஸ்தர்கள் சென்று அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் கால்நடைகளின் இனவிருத்திக்கு பயன்படக்கூடிய கோயில் காளைகள் மற்றும் காளைமாடுகளை வைத்துள்ள நபர்களிடம் நேரில் சென்று வெற்றிலை, பாக்கு,பணம் வைத்து “பாக்குவைத்தல்” என்ற நிகழ்வை நிகழ்த்தி மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
அவர்களும் திருவிழா அன்று தங்களது காளைமாடுகளுடன் கலந்துகொண்டு மாலை மரியாதையுடன் அவற்றை மஞ்சுவிரட்டு தொழுவத்திலிருந்து அவிழ்த்து விடுகின்றனர்.
அங்கு கூடியிருக்கும் இளைஞர்கள் அவற்றை விரட்டி பிடித்து அடக்கி பரிசுகளையும் பெற்றுச் செல்வர்.இதுதான் பண்டைகாலத்தில் “ஏறுதழுவல்” என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாத பெண்கள் தன் காளையை அடக்கிய ஆண்மகனை மணமகனாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்ட நிகழ்வுகளும் ஏராளம்.
அவ்வாறு அவிழ்த்துவிடப்பட்ட இனவிருத்திக்கான காளைகள் அந்த கிராம பகுதியிலேயே சுமார் பத்துப் பதினைந்து நாட்கள் சுற்றித்திரியும்,
இன்னும் சில மாதக்கணக்கில் கூட அங்கேயே சுற்றி தெரிவதுண்டு அந்த காலகட்டத்தில் அந்த கிராம பகுதியில் உள்ள பசுமாடுகள் உடன் இணைந்து இனவிருத்தி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.
நம் விவசாயத்திற்கு தேவைப்படும் கால்நடை இனங்களை நாம் இனவிருத்தி செய்து கொள்வதற்காக அப்போதே நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய அறிவியல் நிகழ்வு தான் இந்த மஞ்சுவிரட்டு திருவிழா.
அதே போன்று உழவுக்கான காளை மாடுகளை உற்சாகப்படுத்தி அவற்றை அடுத்து வரும் விவசாய காலம் வரை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்காகத்தான் மாட்டுவண்டி போட்டிகள் நடத்தப்பட்டும் வந்துள்ளன.
இதை வீர விளையாட்டு என்று சொல்வதைவிட “விவசாய கால்நடைகளின் இனப்பெருக்க அறிவியல் திருவிழா ” என்று சொல்வதே மிகவும் சிறப்புடையதாகும். மொத்தத்தில் இது விவசாயிகளின் திருவிழா..!!
கதிரவன்.
வழக்கறிஞர்.
தேவபட்டு.