காளை வதை அல்ல… பண்பாட்டு வதை:சு.வெங்கடேசன் சிறப்பு பேட்டி

jallikattuஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியம், பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்தும் அது முடக்கப்படுவதன் அரசியல் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும் காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன்….

ஜல்லிக்கட்டு பாரம்பரியமானதா?

ஆதாரம் என்ன?சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கண்டறியப்பட்ட ஒரு முத்திரையில் காளை ஒன்றின் கொம்புகளைப் பிடித்து வீரன் அடக்கும் சித்திரம் இருப்பதை தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியத்தில் ஒன்றான கலித்தொகையில் 103வது பாடல் ஏறு தழுவுதலைப் பற்றிய மிக விரிவான வர்ணனையை தருகிறது. காளைகள் எந்தெந்த வகைப்படும்? அவைகளின் தன்மை என்ன? அதைப் பிடிக்கும் வீரர்களின் தன்மை என்ன? என்பதைப் பற்றி கலித்தொகைப் பாடல் பேசுகிறது. 19ஆம் நூற்றாண்டில் நாட்டுப்புற பாடகர்களால் பாடப்பட்ட அழகாத் தேவன் கதைப்பாடலில் ஏறு தழுவுதலில் பங்கெடுக்கும் காளைகளைப் பற்றிய வர்ணனைகளையும் மாடு பிடி வீரர்களைப் பற்றிய வர்ணனையும் அச்சு அசலாக அப்படியே இடம் பெறுகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்ட இலக்கியங்களில் ஏறு தழுவுதல் என்ற மரபு அறுந்து விடாமல் பதிவாகி இருப்பது மிக முக்கியமான சான்றாகும். இதுபோக, நாட்டார் கதை மரபுகள், வழிபாட்டு மரபுகள் என்று பண்பாட்டின் பல கூறுகளிலும் ஏறு தழுவுதல் பற்றிய பல பதிவுகள் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.s.vengadesan

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?

ஜல்லிக்கட்டினுடைய மூலாதாரமான நோக்கம் ஒரு வீரனின் ரத்தம் விவசாய நிலத்தில் சிந்தப்பட வேண்டும் என்பதுதான். நீங்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு போனால் தெரியும். முதல் காளையான ஊரின் கோவில் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பு அந்த மக்கள் சாமியிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், “இந்த வருசம் அதிகமா குத்து விழணும் சாமி” என்பதுதான். நிறைய காளைகள் பிடிபட வேண்டும் என்று சாமி கும்பிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டின் பிரதான நோக்கம் காளையை அணைவதல்ல; வீரனை அடையாளப்படுத்துவதுதான். தனது நிலத்தில் வீரனின் ரத்தத் துளிகள் சிந்தப்படுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்ற விவசாய சமூகத்தின் ஆதி நம்பிக்கையே இதன் அடிப்படை . கோவில்களில் நடக்கும் வேள்வியின் எச்சங்களை கொண்டு வந்து நிலத்தில் தூவுவதோ அல்லது கோவில் தீர்த்தங்களை கொண்டு வந்து நிலத்தில் தெளிப்பதோ தான் விவசாயம் செழிப்பதற்கான வழி என்ற வைதீக நம்பிக்கைக்கு மாற்றாக, மனிதனின் ரத்தத்துளிகளை உரமாக்கும் உழைக்கும் மக்களின் நம்பிக்கை வெளிப்பாடே இது. அதனால்தான் ஜல்லிக்கட்டு வைதீகக் கோவில்களின் வழிபாட்டு விழாக்களுக்காக நடத்தப்படுவது இல்லை. உழைக்கும் மக்களின் நாட்டார் வழிபாட்டு மரபின் பகுதியாகவே நடத்தப்படுகிறது.

வைதீக புராணங்களான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ஜல்லிக்கட்டு இடம்பெற்றிருப்பதாகவும், அதை பிரதமர் மோடிக்கும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் தான் எடுத்துக் கூறியதாகவும் பாஜக தலைவர் எச். ராஜா சொல்லியிருக்கிறாரே?

வேதகாலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதாக கதைவிட்ட மோடியின் சிஷ்யர்கள் இப்படி கூறுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இவர்கள் இந்தக் கதையை இன்னும் வளர்த்தெடுத்து போவார்கள் என்றே நினைக்கிறேன். காளையை அணைந்து தான் ராமன் சீதையை கல்யாணம் செய்தான் என்றும் திரௌபதி வளர்த்த காளையை பாண்டவர்கள் ஐவர் சேர்ந்து அடக்கியதால் ஐவருக்கும் அவளை மணமுடித்தார்கள் என்றும் கூட இவர்கள் சொல்லக்கூடும்.ஆனால் உண்மை என்ன?முன்னோர் வழிபாடு என்பது திராவிட நாகரிகத்தின் மிக முக்கியமான அங்கம். தென் தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வழிபடப்படும் பலர் ஜல்லிக்கட்டில் மாடு அணைந்து இறந்த வீரர்களாக இருக்கலாம். அல்லது சிறந்த மாடே தெய்வமாக வழிபடப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. நாட்டுப்புற தெய்வங்களில் ஜல்லிக்கட்டு சார்ந்த நடவடிக்கையின் பல அடையாளங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் அப்படி எதுவும் வைதீக புராணங்களில் இல்லை.

ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவதாக கூறி, மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள் அடிப்படையான புகாரை எழுப்பியிருக்கிறார்களே?

கிராமப்புறங்களில் காளைகளின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரும் வதை என்பது அதன் கால்கள் நான்கையும் கட்டி இறுக்கி மண்ணில் சாய்த்து, அதன் குளம்புகளில் லாடம் அடிப்பதுதான். ஆனால் ஜல்லிக்கட்டு காளைக்கு மட்டும் தான் லாடம் அடிப்பதில்லை. காளைகளில் மிகக் குறைவான வதையை சந்திப்பது ஜல்லிக்கட்டு காளைதான். இந்த அடிப்படையே தெரியாமல்தான் இவர்கள் பேசுகிறார்கள்.அதிக வதைக்குள்ளாகும் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் முதலில் இடம்பெற வேண்டியது யானைகளே. குறிப்பாகச் சொல்வதென்றால், குதிரைப் பந்தயங்களுக்கு ஏன் தடைவிதிக்கக் கோருவதில்லை என்று கேட்டால், அதனுடைய உடல் கூறு (அனாடமி) ஓடுவதற்குரியது என்று மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள் பதில் சொல்கிறார்கள். ஆனால் யானையின் அனாடமி, நான்கு கால்களிலும் விரைந்து நடக்கும் இயல்பைக் கொண்டது. நாள் ஒன்றுக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வரை நடக்கக்கூடியவை யானைகள். ஆனால் ஒரு கோவில் யானை தனது வாழ்நாள் முழுவதும் 60 கிலோ மீட்டர் வரை நடக்க அனுமதிக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. அதேபோல அங்குசத்திற்கு கீழ்படிய, 6 மாதத்தில் துவங்கி வருடக் கணக்கில் யானைகளின் மீது நடத்தப்படுகிற வன்முறை கணக்கற்றது. ஆனால் இவைகள் மூடி மறைக்கப்பட்டு காளைகளே குறிவைக்கப்படுவதற்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை. யானைகள் பெரும் கோவில்களுடனும் வைதீகச் சடங்குகளுடனும் சம்பந்தப்பட்டவை. காளைகள் நாட்டார் தெய்வங்களுடனும் உழைக்கும் மக்களின் வழிபாட்டுடனும் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் பிச்சை எடுக்க வைக்கப்பட்டாலும் யானைகளுக்கு அரசு அல்லது சட்ட ஆசீர்வாதம் கிடைக்கிறது. எவ்வளவு பாதுகாப்பாகவும் அக்கறையுடனும் நடத்தப்பட்டாலும் காளைகளுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த உழைக்கும் மக்களின் பண்பாடும் வைதீகம் சார்ந்த கோவில் பண்பாடும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை; நேர் எதிரானவை. குறிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அதே கிராமப்புறத்தின் மந்தைகளில் மாடு உரசும் கல் நடப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆடு, மாடுகளின் உடம்பில் பூச்சிகளும் கொசுக்களும் தொடர்ந்து கடித்துக் கொண்டிருப்பதிலிருந்து தப்பிக்க அது தனது உடலை ஏதாவது ஒரு பொருளின் மீது உரசி தன்னை ஆசுவாசப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஆனால்கிராமப்புறங்களில் குடிசை வீடுகளே நிரம்பியிருப்பதால் ஆடு, மாடுகள் தங்களது உடலை உரசி ஆசுவாசப்படுத்த முடியாத சூழல் இருக்கிறது . எனவே மாடு உரசும் கல் அமைப்பது ஊரின் அறம் எனக் கருதிய நமது முன்னோர்கள், அந்தக் கற்களை கிராம மந்தைகளில் நட்டு வைத்தார்கள். விலங்கு பாதுகாவலர்கள் தங்கள் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அக்கறையும் உணர்வும் நிறைந்த செயல் அது. பல்லுயிரை நேசித்த விவசாயப் பண்பாட்டின் வெளிப்பாடு இது. மாட்டின் கோமியத்தை புனிதம் எனக் கருதுகிற வைதீக கருத்தாக்கத்திற்கும், மாடு உரச கல் வைப்பதே அறம் எனக் கருதுகிற உழைக்கும் மக்களின் கருத்தாக்கத்திற்கும் இடையில் காலங்காலமாக நடக்கும் பண்பாட்டுப் போரின் தொடர்ச்சிதான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு என்பது கிராமத்தின் ஆதிக்க சாதியினரின் வீரத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு விளையாட்டாகவே இருந்து வந்திருக்கிறது என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மாடுகளை கொண்டு வருவதற்கோ, மாடுகளைப் பிடிப்பதற்கோ பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

நான் அறிந்த வரை இரண்டே விதிகள் தான் ஜல்லிக்கட்டில் இருக்கிறது. ஒன்று, ஜல்லிக்கட்டை நடத்தும் ஊரின் சாமி மாடு முதல் மாடாக அவிழ்த்து விடப்படும்போது அதனை மாடு பிடி வீரர்கள் பிடிக்கக் கூடாது. இரண்டு, அதனைத் தொடர்ந்து அவிழ்த்து விடப்படுகிற எந்தவொரு மாட்டையும் ஜல்லிக்கட்டு நடத்துகிற ஊரார்கள் பிடிக்கக் கூடாது. அதாவது, மாடு பிடிவீரர்களுக்கு ஊரும், ஊருக்கு மாடு பிடி வீரர்களும் பரஸ்பரம் செலுத்துகிற மரியாதை என்பதாக இது இருக்கிறது. இதைத் தாண்டி தலித்துகளோ குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்தவர்களோ மாடு கொண்டு வரக்கூடாது என்றோ பிடிக்கக் கூடாது என்றோ பழக்கம் இருப்பதாக தெரியவில்லை. புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அங்குள்ள முனியாண்டி கோவிலின் திருவிழாவாகத்தான் கொண்டாடப்படுகிறது. அந்தக் கோவிலின் பூசாரியும், சாமியாடியும் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள்தான். அந்த ஊரின் கோவில் மாட்டை வளர்த்துப் பாதுகாக்கும் பணியை அந்த பூசாரியான தலித் சமூகத்தைச் சார்ந்தவர்தான் பார்த்துக் கொள்கிறார். இது தவிர, அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாடு வளர்க்கவோ, மாடு அணையவோ எந்த தடையும் இல்லை.ஒருவேளை வேறு எங்காவது இதுபோன்று ஒரு நிலை இருக்குமானால், அது தீண்டாமையின் வடிவமே. அது ஒழிக்கப்பட வேண்டும். அதன்பொருட்டு, ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு நிகழ்வே நிறுத்தப்பட வேண்டும் என்று சிலர் வாதிடுவதை ஏற்க முடியாது.

இந்தப் பிரச்சனையை திமுகவும் அதிமுகவும் கையாண்ட விதம் பற்றி ….?

2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற இப்பிரச்சனையில் திமுக, அதிமுக இரு க ட்சிகளும் மிகவும் பொறுப்பற்ற தன்மையுடனே அணுகியிருக்கின்றன. ஜல்லிக்கட்டைத் தடுக்க நினைக்கும் விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் இந்த பத்தாண்டுகளில் செய்துள்ள பணிகளோடு ஒப்பிடுகிறபொழுது அதை நடத்த நினைக்கிற அரசாங்கம் எவ்வித அக்கறையுமின்றியே இப்பிரச்சனையை அணுகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் மிருகவதை தடுப்பு ஆர்வலர்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் 1100 பேர் காயம் பட்டிருக்கிறார்கள் என்றும், 17 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்றும் 3 காளைகள் இறந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இந்த பத்தாண்டுகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்ற வழிகாட்டுதலின் படிதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுகள் நடந்தன. ஆனால் அது எந்த அளவிற்கு முறையாக நடத்தப்பட்டது என்பது பற்றிய புள்ளி விவரம் அரசிடம் ஏதாவது இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். 1940-50களில் வைதீக பண்பாட்டுக்கு மாற்றான ஒரு வடிவமாக பொங்கல் திருநாளையும், மாட்டுப் பொங்கலையும் மாற்றிக்காட்டிய பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு. ஆனால் இன்று அந்த மாற்றுப் பண்பாட்டின் சாரத்தை இழக்கச் செய்யும் விதத்தில் இந்துத்வா அரசியல் நடத்தும் சூழ்ச்சிகளுக்கு எதிராக இரு கட்சிகளும் முனைப்புடன் செயலாற்றவில்லை.jallikattu

கடந்த ஐ.மு. கூட்டணி அரசு, ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிக்கவில்லை என்றும், மோடி ஒரு அரசாணை பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்துவிட்டார் என்றும் பாஜகவினர் புளகாங்கிதம் அடைந்தார்களே?

அதே நேரத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்திருக்க வாய்ப்பு இருந்தும் அதைச் செய்யாமல், மிருகவதை தடுப்பு ஆர்வலர்களும் வாரியமும் தடை கேட்பார்கள் என்று தெரிந்தும் அரசாணை மட்டுமே பாஜக அரசு பிறப்பித்ததே. அதைப்பற்றி சொல்லுங்களேன்……..பாஜக நடத்துகிற ஒரு அப்பட்டமான நாடகம் இது. 2014ஆம் ஆண்டு ஜ ல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்தத் தடையை நீக்க மோடி அரசு ஒரு துரும்பைக் கூட கடந்த 18 மாதங்களாக கிள்ளிப்போடவில்லை. மத்திய அரசு நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்து மசோதா கொண்டு வந்து, காட்சிப்படுத்தும் பட்டியலிலிருந்து காளையை நீக்கியிருக்க முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் பல சட்டத்திருத்தங்களை கொண்டு வந்த மோடி அரசு ஜல்லிக்கட்டை பாதுகாக்க முனையவில்லை. இந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், ஒரு திடீர் நாடகத்தை அரங்கேற்றினர். வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அரசாணை வெளியிட்டதற்கு பதிலாக அவசரச்சட்டம் கொண்டு வந்திருந்தாலாவது சிக்கல் ஏற்பட்டிருக்காது. விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க திரும்பத் திரும்ப அவசரச்சட்டம் கொண்டு வந்தவர்களுக்கு, ஜல்லிக்கட்டு மீது அக்கறை இருந்திருந்தால் இதை செய்திருக்க முடியும். ஆனால் அரசாணை பிறப்பித்ததை தங்களது மிகப்பெரிய சாதனையாக தமிழகத்தில் பாஜகவினர் ஊதினார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கே மோடி பெயரை வைக்க வேண்டும் என்றும் போட்டியை பார்வையிட அமித்ஷாவை அழைத்திருக்கிறோம் என்றெல்லாம் `பொன்னார்’ பூரித்தார். கையில் கட்டுப் போட்டுக் கொண்டு, காளை மாடு கையை கிழித்து விட்டதாகக் கூறினார். ஆனால் எல்லாம் வெளி வேஷம் என்பது தெளிவாகிவிட்டது.

அதிமுக அரசு இந்தப் பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தியதா?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூட எடுத்த முயற்சியில் நூறில் ஒரு பங்கைக் கூட இதில் எடுக்கவில்லை. இப்போது கூட கடிதம் எழுதுவதோடு முதல்வர் தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார். நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர். யாராவது குரல் கொடுத்தார்களா? மோடி அரசுக்கு நிர்ப்பந்தம் செய்தார்களா? எதுவும் செய்யவில்லை.

ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு நிகழ்வு. இப்போது இருக்கும் வடிவிலேயே தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

காளைகளின் நலன்; வீரர்களின் பாதுகாப்பு. இரண்டையும் உறுதிப்படுத்த அரசு நிறுவனங்கள் இன்னும் அக்கறையுடன் செயலாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் பெண்களும் பங்கு வகிக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசித்தனர். ஆனால் 2006க்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழலில் பெண்கள் முழு முற்றாக நீக்கப்பட்ட ஒரு நிகழ்வாக ஜல்லிக்கட்டு மாறியிருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். பெண்களுக்கான இடம் உறுதி செய்யப்பட வேண்டும். தீண்டாமையின் எந்தவொரு வடிவமும் ஜல்லிக்கட்டில் தலைதூக்கா வண்ணம் அந்நிகழ்வை நடத்துவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.நாட்டார் கோவில்களில் மட்டுமின்றி, சிறுபான்மை மக்களின் – குறிப்பாக இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களிலும் இந்த விளையாட்டு நடத்தப்பட்டது என்கிற சமயச்சார்பற்ற தன்மையும் இதில் பேணப்பட்டது. அது உறுதியாகத் தொடர வேண்டும்.இன்றைய நிலையில், உடனடியாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து, இந்தாண்டே ஜல்லிக்கட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.நேர்காணல் : எஸ்.பி.ராஜேந்திரன்

நன்றி

வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது

தோழர் ஏ.பி.பரதன் நினைவுகள்… : சி.மகேந்திரன்

எச்சரிக்கும் அழிவுகள் : ம.செந்தமிழன்

Recent Posts