முக்கிய செய்திகள்

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடே சுகா பதவி ஏற்கவிருக்கிறா்..

ஜப்பான் புதிய பிரதமர் யொஷிஹிடே சுகா

ஜப்பானின் அடுத்த புதிய பிரதமராக அந்நாட்டின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் திரு யொஷிஹிடே சுகா பதவி ஏற்கவிருக்கிறார். பதவி விலகியுள்ள ஷின்சோ அபேயின் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக இருந்த திரு சுகா இன்று நடைபெற்ற ஆளும் கட்சித் தலைவர் தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.
கடந்த பல ஆண்டுகளாக ஜப்பானின் பிரதமராகப் பதவி வகித்த திரு அபே உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென்று பதவி விலகினார்.
ஜப்பானின் நாடாளுமன்றம் நாளை கூடும்போது திரு சுகா பிரதமர் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியை திரு சுகா ஏற்றதும் புதிய அமைச்சரவையை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் வடகிழக்கு மாநிலமான அகிட்டாவில் உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திரு சுகாவுக்கு கடந்த சில வாரங்களாக ஜப்பானிய மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
கொள்கை அமைப்பு, அதிகாரத்துவ விவகாரங்கள் ஆகியவற்றில் தமக்கு அதிக அனுபவம் இருப்பதாக திரு சுகா வலியுறுத்தியுள்ளார்.

அரசதந்திர விவகாரங்களில் திரு சுகாவுக்கு அவ்வளவு அனுபவம் இல்லாதபோதிலும், திரு அபேயின் அரசதந்திரக் கொள்கைகளைத் தொடரப்போவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவுடனான பாதுகாப்புக் கூட்டணியை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்.
பொருளியல் மந்தநிலையின்போது திரு சுகா பிரதமராகப் பதவி ஏற்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாது, மூப்படையும் மக்கட்தொகை, குறைந்த பிறப்பு விகிதம் போன்ற முக்கிய சவால்களை ஜப்பான் எதிர்நோக்குகிறது. மேலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோசமடைந்து வரும் உறவு போன்ற உலகளாவிய பிரச்சினைகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டிவரும்.

இந்நிலையில், நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்றும் அடுத்த மாதத்துக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தாங்கள் எதிர்பார்ப்பதாக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரண்டு மூத்த அரசியல்வாதிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்குப் பிறகு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பானிய மக்களுக்கிடையே தமக்கு இருக்கும் அமோக ஆதரவைப் பயன்படுத்தி தமது பிரதமர் பதவியை உறுதி செய்ய திரு சுகா பொதுத் தேர்தலைக் கூடிய விரைவில் நடத்தக்கூடும் என்று நம்பப்புகிறது.

கூடிய விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து நேற்று திரு சுகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அதுகுறித்து அவர் உறுதியான பதிலைக் கூறவில்லை. மாறாக, கொவிட்-19 நிலவரம் மோசமாவதைத் தடுப்பதும் பொருளியல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் ஜப்பானிய மக்களின் விருப்பம் என்று அவர் கூறினார்.