ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் 6 மாதம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு..


ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தை 6 மாதம் கால நீட்டிப்பு செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் அன்று உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் 5-ம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் சந்தேகம் எழுப்பினர். இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 25-ல் தமிழக அரசு வெளியிட்டது. விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். இரண்டு மாத காலத்தில் விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜெயலலிதா விசாரணையை நவம்பர் 22-ம் தேதி ஆறுமுகசாமி தொடங்கினார். முதல் நாள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் ஆஜராகி சில ஆவணங்களை அளித்தார். பின்னர் திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன், ஜெ. தீபா, தீபக், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், கிருஷ்ணப்பிரியா, உள்ளிட்ட பலர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இன்னும் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால், ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் விசாரணையை இரண்டு மாத காலத்திற்குள் முடிப்பது இயலாத காரியம். விசாரணை முழுமை பெறாத நிலையில் விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் வரும் 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.