ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஜெ.பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றம், மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த சாமிநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் 8-ம் தேதியும், உதவியாளர் பூங்குன்றன் 9-ம் தேதியும், பெருமாள்சாமி 10-ம் தேதியும், டாக்டர் பாலாஜி -11-ம் தேதியும். ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த சாமிநாதன் 12-ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர். இதில் மருத்துவர் பாலாஜிக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அவர் தனது விசாரணை தொடங்கினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவன், தலைமை செயலாளர்களாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகன்ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை 7 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தினகரன் தரப்பு சார்பில் விசாரணை ஆணையத்திடம் பென்டிரைவ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் பெருமாள்சாமி வரும் 10-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி சம்மன் அளித்துள்ளார். அதேபோல் 8-ம் தேதி மருத்துவர் சிவக்குமாரும், 9-ம் தேதி ஜெயலலிதாவின் பூங்குன்றனும், 11-ம் தேதி மருத்துவர் பாலாஜி 2-ஆவது முறையாகவும் ஆஜராக உள்ளனர்.