ஜேஇஇ நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: தினகரன்..

ஜேஇஇ நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (நவ.8) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும்.

இதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவற்றோடு, மாநில மொழிகளில் ஒன்றான குஜராத்தியில் மட்டுமே ஜேஇஇ நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கான வசதி தற்போது இருக்கிறது.

இது குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து இத்தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்திருக்கிறது. அதில், குஜராத் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே குஜராத் மொழியிலும் இத்தேர்வு நடத்தப்படுவதாகவும், மற்ற மாநில அரசுகள் இது குறித்து எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற கனவு இன்னும் நம்முடைய ஏழை, எளிய மாணவச் செல்வங்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிற நேரத்தில்,

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மொழியிலும் அதற்கான நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கான கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு, தேசிய தேர்வு முகமையிடம் வைத்திட வேண்டும்.

இதன் மூலம் வருகிற ஆண்டு முதலே தமிழ் வழியாக ஜேஇஇ நுழைவுத்தேர்வினை தமிழக மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இதனால் மிகக் குறைந்த அளவே தமிழக அரசின் மாநில பாடத்திட்டம் வழியாக படித்த மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் தற்போதைய நிலையை மாற்றிட முடியும்.

அதே நேரத்தில் என்டிஏ அளித்திருக்கும் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற இன்னொரு நுட்பமான செய்தியையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் ஜேஇஇ நுழைவுத் தேர்வின் வழியாக நடத்துவதற்கு முன்பு ஒப்புக்கொண்ட குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், அம்முடிவை 2016 ஆம் ஆண்டோடு கைவிட்டு விட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களே தேசிய பொது நுழைவுத்தேர்வின் வழியாக மாநிலங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து வெளியேறி இருப்பதை தமிழக அரசு புரிந்து கொண்டு,

எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் அப்படியோர் நிலை வருவதற்கு ஒப்புக் கொள்ளக்கூடாது,” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மராட்டிய ஆளுரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : நாடுமுழுவதும் உஷார் நிலை..

Recent Posts