அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இதற்கிடையே, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை (அமெரிக்க நேரப்படி) இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அவர் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசு உயரதிகாரிகள் கூட்டத்தில் இன்று உரையாற்றிய ரவுஹானி இஸ்லாமிய புனிததலங்கள் தொடர்பாக நடைபெறும் அத்துமீறல்களை ஈரான் சகித்து கொள்ளாது. இந்த சதி திட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.