3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடையை நீக்க சட்டப்பேரவை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
3 எம்எல்ஏக்கள் மீது விதிமுறைகளின் படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்க சட்டமன்றப் பேரவை உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்.
அமமுக பாஜகவை எதிர்ப்பதாக கூறுகிறீர்கள். அமமுக எதிர்காலத்தில் பாஜகவின் காலைக் கழுவிக் கூட குடிக்கும். சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த அடையாளம் அமமுக. குடியரசுத் தலைவர் தேர்தலில் கேட்காமலே ஆதரவு கொடுத்தது தினகரனின் அமமுக. ஸ்டாலின் பாணியில் கூறினால் தினகரன் வெட்கம், சூடு, சுரணை எதுவும் இல்லாதவர். அதிமுகவைப் பொறுத்தவரையில் பாஜவை, மத்திய அரசை எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்போம். ஆதரிக்க வேண்டியவற்றில் ஆதரிப்போம். உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை விதிமுறைகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கும். கைவிடப்பட்ட வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் திட்டம் தீட்டி, சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையை போக்கியவர் ஜெயலலிதா. அது போல் தற்போதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.