பத்திரிகையாளர் ஞாநி காலமானார்…

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.

கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர்.

இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. ஞாநியின் உடலுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஞாநியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

1954-ல் செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர் சங்கரன். இவரது தந்தையும் வேம்புசாமியும் பத்திரிகை துறையில் பணியாற்றியவர். தந்தையின் வழியில் ஞாநியும் பத்திரிகை துறைக்கு வந்தார்.

பூசி மெழுகாமல், பட்டென்று வெளிப்படையாகப் போட்டுடைக்கும் தைரியமான பத்திரிகையாளர், எழுத்தாளர்களில் ஒருவராக ஞாநி திகழ்ந்தார். பத்திரிகைகளைக் கடந்து நாடகம், அரசியல், ஃபேஸ்புக், தொலைக்காட்சி விவாதம் என்று பரபரப்பாக இயங்கிவந்தார். தன் கருத்துக்களைக் களத்திலும் செயல்படுத்திப் பார்ப்பவர்.

முதன்முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் தனது பத்திரிகை பயணத்தைத் தொடங்கினார். பின்னர், பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும் பணியாற்றினார். பரீக்‌ஷா என்ற நாடகக் குழு ஒன்றை நடத்திவந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஞாநி, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.