பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பு கிட்: தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் வழங்கினார்…

தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். பத்திரிகையாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

கரோனா பாதிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம் என அரசு கோரிக்கை வைத்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கோயில், மசூதி, சர்ச்சுகளில் பொதுமக்கள் கூட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசுடன் இணைந்து சென்னை மாநகராட்சியும் எடுத்து வருகிறது. அனைவரும் வீடுகளிலிருந்து பணியாற்றி வருகின்றனர்.

ஆனாலும், ஊடகச் செய்தியாளர்கள், கேமராமேன்கள், கேமரா உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் செய்திக்காக வெளியில் பணியாற்றும் நிலை உள்ளது.

தற்போது சட்டப்பேரவை நடந்து வருகிறது. சட்டப்பேரவையைத் தள்ளிவைக்க திமுக கோரிக்கை வைத்தது. ஆனாலும் மானியக் கோரிக்கை காரணமாக ஒத்திவைக்கவில்லை.

இந்நிலையில் சட்டப்பேரவை இன்று வழக்கம்போல் தொடங்கியது. அப்போது சட்டப்பேரவைக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்கள்,

கேமராமேன்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை அளித்தார். அவருக்குச் செய்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதேபோன்று சமீபத்தில் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின், மணமக்களுக்கு கிருமி நாசினி அடங்கிய கிட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.