நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு அழிவுக்கே இட்டுச் செல்லும்: மூத்த நீதிபதி செலமேஸ்வர்


உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமை நீதிபதிக்கான தன் கடிதத்தில் நீதித்துறையில் அரசுத் தலையீடு குறித்து கவலை வெளியிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கோரியிருந்தார், இந்தக் கடிதம் குறித்து அனைத்து இந்திய வழக்கறிஞர்கள் சங்கமும் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளன.

இது குறித்து வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதி செலமேஸ்வர் கடிதம் வெளிப்படுத்துவது என்னவெனில் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசின் நேரடித் தலையீடு இருப்பது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் நீதித்துறையின் தன்னாட்சி தற்போது ஆபத்தில் உள்ளது” என்று கவலை வெளியிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா பட் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் தலையீட்டினால் என்று செலமேஸ்வர் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார், இதனால் நாடு முழுதும் உள்ள வழக்கறிஞர்கள் கவலையடைந்துள்ளனர். செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணா பட் கொலீஜியத்தினால் இருமுறை பதவி உயர்வுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மற்றும் மூத்ட வழக்கறிஞர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் பொதுச் செயலாளர் சோம் தத்தா சர்மா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் “அரசு கொடுக்கும் அழுத்தத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணிந்து போயிருப்பது ஜனநாயகத்துக்கு வலியை ஏற்படுத்தும் விவகாரமாகும். தற்போதைய அரசு நீதித்துறையின் தனித்துவத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல் சிலபல நீதிபதிகளும் அவற்றுக்கு அடிபணிவது ஜனநாயகத்தின் வலியாகும்” என்று வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலீஜியம் பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்த நீதிபதி மீது வேண்டுமென்றே விசாரணை மேற்கொள்வதைக் கண்டித்த அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம், கொலீஜியம் பரிந்துரைகளை ஏற்க முடியவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

“ஒரு நீதிபதியானவர் அரசியல் சாசனத்துக்கு உறுதிமொழி மூலம் சாதகமும் அச்சமுமற்ற வகையில் கட்டுப்பட்டவர், இந்த சந்தர்ப்பத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்ட உறுதிமொழியைக் கடைபிடிக்கவில்லை. எனவே ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நீதிபதி செலமேஸ்வர் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், எந்த ஒரு நாட்டிலுமாகட்டும் நாட்டுக்குள்ளாகட்டும் நீதித்துறையும், அரசும் கைகோர்ப்பது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணியாகும் என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 12-ம் தேதி வழக்குகளை ஒதுக்குவதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக பாதைத்திறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது நாடு முழுதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் தொடர்ந்து நீதித்துறையின் தனித்துவத்துக்கும், நிறுவன ரீதியான நேர்மைக்கும் பேசி வரும் செலமேஸ்வர் தற்போது, “உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நாம் நம் தனித்துவத்தையும் சுதந்திரத்தையும், நிறுவன நேர்மையையும் அரசின் ஆக்ரமிப்பில் இழந்து விட்டதாக குற்றச்சாட்ட்டுகள் எழுந்து வருகின்றன என்று தன் கடிதத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

“அரசு எப்போதுமே பொறுமையற்றிருக்கிறது. நீதித்துறையின் கீழ்படியாமை கூர அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலைமை நீதிபதிகளை தலைமைச் செயலகத்துறைகளின் தலைவர்களாகக் கருதும், நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று செலமேஸ்வர் தெரிவித்துள்ளார்.