மலேசியாவில் ஜூலை 1லிருந்து திரையரங்குகள் செயல்பட அனுமதி..

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதியளிக்கவிருக்கிறது.
நேரடி நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் யாக் கோப் நேற்று தெரிவித்தார்.

கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று சிறிய, நடுத்தர நிறுவனங்களும் பயணத் துறையும் தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பேசிய அமைச்சர், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.

“ஆனால் மூடப்பட்ட இடத்தில் வர்த்தகங்கள் செயல்பட வேண்டும்,” என்று கூறிய அவர், இடத்தின் அளவைப் பொறுத்து 250 பேருக்கும் மேல் இருக்கக் கூடாது என்று கூறினார்.

“ஒரு மீட்டர் சமூக இடைவெளியுடன் 250 பேர் ஒரே இடத்தில் இருக்கலாம்,” என்று மேலும் அவர் சொன்னார்.

மலேசிய பொருளியலில் முக்கிய பங்காற்றிவரும் சில்லறை விற் பனைத்துறை, பயணத் துறை சங்க உறுப்பினர்களிடையே தளர்வு நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் பேசினார். நாட்டின் பொருளியலை மீண்டும் திறப்பதற்கான உத்தேச யோசனைகளை பிரதமர் முஹைதீன் யாசினிடம் தொழிற்துறையினர் சமர்ப்பித்துள்ளனர்.

உதாரணமாக, மலேசிய சுற்றுலா, பயணத் துறை முகவர் சங்கத்தின் தலைவர் டான் கோக் லியாங், மலேசியா எல்லைகளைத் திறக்கும்போது பல நாடுகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவுக்கு வரும் மொத்த வெளிநாட்டு பயணிகளில் 75%க்கு மேல் வியட்னாம், தாய்லாந்து போன்ற ஆசியான் நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“விரைவில் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்களுக்கு அனுமதி அளிக்கக்கப்படும். அதன் பின்னர் மருத்துவப் பயணங்கள், கல்வி ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கடைசியாக பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அனுமதி வழங்கப்படும்,” என்று திரு இஸ்மாயில் யாக்கோப் கூறினார்.