முக்கிய செய்திகள்

ஜூலை 27ம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்…


அடுத்த மாதம் 27ம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது.சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியன்று முழு சந்திர கிரகண நிகழ்வு ஏற்பட்டது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஹவாய், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் கண்டு ரசித்தனர். இந்த சந்திர கிரகணகத்தின்போது சூப்பர் மூன், புளூ மூன் ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன. சந்திரன் வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாக தெரிவதே சூப்பர் மூன் எனப்படும்.

இந்தாண்டின் தொடக்கத்தில் முழு சந்திர கிரகணம் தெரிந்த நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுவாகும். கடந்த முறையை விட பெரிய அளவிலான இந்த சந்திர கிரகணம், 1 மணி 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் என தகவல் வெளியாகிஉள்ளன.ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும். வட அமெரிக்கா, ஆர்டிக்-பசிபிக் பகுதிகளில் இது தெரியாது.

ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா, ஆப்ரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும். ஜூலை 27ம் தேதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது.