முக்கிய செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது..

டாக்காவில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

வங்காள தேசத் தலைநகர் டாக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால் (85) , அனுஜ் ராவத் (57) ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் சிம்ரான் சிங், ஆயுஷ் படோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது.

படோனி 28 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்களும், சிம்ரான் சிங் 37 பந்தில் 3 பவுண்டர, 4 சிக்சருடன் 65 ரன்களும் விளாசினார்கள்

பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை இளைஞர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினார்கள்.

ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த, இலங்கை அணி 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இலங்கை அணியில் பெர்னாண்டே 49 ரன்களும், பரனவிதனா 48 ரன்களும், சூரியபண்டாரா 31 ரன்களும் சேர்த்தனர்.