முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை: ஒரே நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்திய அணி சாதனை..


ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை மனு பேகர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை தாய்லாந்து வீராங்கனை ஹிருன்போயிமும், வெண்கலப்பதக்கத்தை சீனாவின் கைமானும் தட்டிச்சென்றனர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் இந்திய வீராங்கனைகளான மனு பேகர், தேவன்ஷி ரானா, மஹிமா துர்கி அகர்வால் ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கம் வென்றது. வெள்ளிப்பதக்கம் சீன அணிக்கும், வெண்கலப்பதக்கம் தாய்லாந்து அணிக்கும் கிடைத்தது.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் சிங், கவுரவ் ரானா, அன்மோல் ஜோடி தங்கப்பதக்கத்தையும், அன்ஹாத் ஜவாண்டா, அபிஷேக் ஆர்யா, ஆதர்ஷ் சிங் அடங்கிய மற்றொரு இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. சீனா அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றது.
இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் கவுரவ் ரானா வெள்ளிப்பதக்கம் வென்றார். வெண்கலப்பதக்கத்தை மற்றொரு இந்திய வீரர் அன்மோல் தட்டிச்சென்றார். சீன வீரர் வாங் தங்கப்பதக்கம் வென்றார்.

கலப்பு ஷாட்கன் பிரிவில் நடைபெற்ற குழு போட்டியில் இந்தியாவின் எலாகி – கீர் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. இப்போட்டியின் தங்கப்பதக்கத்தை இத்தாலி அணியும், வெண்கலப்பதக்கத்தை சீனா அணியும் தட்டிச்சென்றது.
இன்று ஒரே நாளில் இந்திய 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை தட்டிச்சென்றது. இதன்மூலம் இந்திய அணி 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா 6 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.