நாகை-வேதாரண்யம் இடையே கஜா புயல் அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது.
கஜா புயல் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவ்வப்போது தகவல்களை அளித்துக் கொண்டே இருந்தார். அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் புயலின் கண்பகுதியின் முதல் பகுதி வேதாரண்யம் அருகே கரையைத் தொட்டது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. பலமான காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
ஜேசிபி இயந்திரங்கள் மூலம் முறிந்த மரங்களை அகற்றும் பணிகள் துவங்கின.81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு தேவையான உணவு, அடைக்கலம், மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டன.
கஜா புயல் அதிகாலை 2.30 மணியளவில் நாகை – வேதாரண்யம் இடையே கரையைக் கடந்ததாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும், புயல் முழுமையாக கரையை கடக்க, 2 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
புயல் கரையைக் கடந்தபோது, அதிகபட்சமாக, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசியதாகவும், கஜா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.