கஜா புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக அரசும், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அரசும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, புயல் பாதிப்பு குறித்து தமிழக அரசிடம் கேட்கப் பட்டிருந்த சில விளக்கங்களுக்கு போதிய விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியில் போதுமான தொகை இருந்தும், கஜா புயல் நிவாரணங்களுக்கு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என வாதிட்டார். நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இடைக்கால நிவாரண நிதியாக 353 கோடியே 70 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாகவும், அதைத்தவிர இன்று வரை வேறு எந்த தொகையும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
மத்திய குழு ஆய்வின் அடிப்படையில் நிவாரண நிதியை வழங்கலாம் என சுட்டிக்காட்டிய அவர், தாமதப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து விளக்கங்கள் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டினார். அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும் என்றும், அதற்காகவே விளக்கங்கள் கேட்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் தமிழக அரசு அளித்த விளக்கங்கள் நேற்று மதியம் 2.30 மணியளவில்தான் மத்திய அரசுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார். அப்போது மீண்டும் பேசிய தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய அரசு கோரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதோடு, தமிழக அதிகாரிகளின் குழுவும் டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையாக உள்ளதா என்றும், நிவாரண நிதி தொடர்பாக எப்போது முடிவெடுக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.