வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
நாகைக்கு வடகிழக்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இது வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கரைக்கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14 ஆம் தேதி மாலை முதல் மழைபெய்யத் தொடங்கும். தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும். கடலின் நீர்மட்டம் வழக்கத்தை விட உயர்ந்து காணப்படும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வரும் 15 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதித்துள்ள தமிழக அரசு, முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்பவும் உத்தரவிட்டுள்ளது.