கலைஞர் இரங்கல் தீர்மானம் : பேரவையில் கதறி அழுத துரைமுருகன்..

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசியபோது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கதறி அழுத சம்பவத்தால் சக உறுப்பினர்கள் கருணாநிதியின் நினைவலைகளில் முழ்கினர்.

சட்டசபையில் இன்று கருணாநிதி மறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் பேசிய துரைமுருகன், தன்னை இந்த மன்றத்தில் பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன் என தெரிவித்தார்.

ஆனால் இன்று கருணாநிதிக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருக்கிறேன் என கூறினார்.

கனத்த இதயத்தோடு கண்ணீரை அடக்கிக் கொண்டு பேச முற்படுகிறேன் என்று தன் உரையை தொடங்கிய அவர்,

கருணாநிதி பன்முகத்தன்மை கொண்டவர், அரசியல் வித்தகர், இலக்கிய வேந்தர், கவிதைக் கடல், புரட்சிகரமான வசனங்களை திரையில் தீட்டியவர், என அவரை ஒரு முகத்தோடு அடக்கி விட முடியாது என புகழாரம் சூட்டினார்.

தனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் என்று நெகிழ்ந்துருகிய துரைமுருகன், அன்று தான் இறந்திருந்தால் தனது உடல் மீது அவர் கண்ணீர் சிந்தி இருப்பார்.

ஆனால் தனது துர்பாக்கியம் கருணாநிதியின் உடல் மீது தான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டதாக கூறியபோது துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டார்.

அவர் பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்ததும் கதறி அழுதார். அவரை மு.க. ஸ்டாலின் ஆறுதல் படுத்தினார்.