முக்கிய செய்திகள்

எப்படி இருக்கிறார் கலைஞர்: இன்று (சனிக்கிழமை) நடந்தவை…

திமுக தலைவர் கலைஞர், ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி  மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை (28.7.18) அனுமதிக்கப்பட்டார்; தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது’ என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவரது உடல் நலம் குறித்து

உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

கோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இதுவரை காவேரி மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் தனது சொந்த காரில் கலைஞர் சென்ற நிலையில், முதன் முறையாக ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்ததாவது: திமுக தலைவர் கலைஞருக்கு ஏற்பட்ட, திடீர் ரத்த அழுத்த குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்ட 25 நிமிடங்களில் அவருக்கு ரத்த அழுத்தம் சீரானது. தற்போது அவர் நலமாக உள்ளார். தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலைஞரின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதிக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதால், அதிகாலை 1.30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின், அவரது ரத்த அழுத்தம் சீரானது. கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரானதை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் வீட்டிற்கு கிளம்பி சென்றார். கனிமொழி உள்ளிட்டோரும் வீட்டிற்கு கிளம்பி சென்றனர். தொண்டர்களும் சிறிது சிறிதாக கலைந்து சென்றனர். பின்னர் ஸ்டாலின் , கனிமொழி உள்ளிட்டோர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இன்று (28 ம் தேதி ) காலையில் ஸ்டாலின், கனிமொழி, செல்வி, துரைமுருகன், அன்பழகன், அழகிரி, ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். 10 மணி அளவில் கவர்னர்  பன்வாரிலால், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதி உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். மதியம் 2 மணியளவில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடன் வானதி சீனிவாசன் ஆகியோர் மருத்துவமனையில் நலம் விசாரித்தனர்.

காங்., மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, தினகரன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் பிரபு ஆகியோர் வந்தனர்.

ஆடிட்டர் குருமூர்த்தி கருணாநிதியை சந்தித்து விட்டு அவர் நிருபர்களிடம் பேசுகையில்; அரசியல் , கலைத்துறை மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் அவர் முத்திரை பதித்தவர். அகில இந்திய அளவில் ஒரு மூத்த தலைவர். அனைத்து விஷயங்களையும் அறிந்தவர்.

எங்களுக்குள் மாற்று கருத்துகள் இருந்தாலும் கருணாநிதி மீது எனக்கு தனி மதிப்பு உண்டு. 1996 முதல் அவருடன் நெருங்கி பழகி இருக்கிறேன், மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு திறம்பட பதில் அளிக்கும் ஆற்றல் கொண்டவர். எமர்ஜென்ஸியை எதிர்த்து நின்றவர். தமிழகத்தின் பெரும் தலைவர். இவர் நலம் பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

காங்., மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத் கூறுகையில்: கருணாநிதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளா். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் நலம் குறித்து கேட்டேன். மருத்துவர்களிடமும் கேட்டறிந்தேன். அவரது உடல் நிலை நலமாக உள்ளது. தேறி வருகிறது என்ற தகவல் மகிழச்சி அளிக்கிறது. சோனியா, ராகுல் ஆகியோர் விசாரித்தத தகவலையும் அவர்களிடம் தெரிவித்தேன். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்தி அளிக்கிறது. அவர் விரைவில் வீட்டுக்கு திரும்புவார்.

மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நிருபர்களிடம் பேசிய கருணாநிதி மகள் கனிமொழி; கருணாநிதி நலமாக உள்ளார், ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கருணாநிதி பிறவி போராளி. மீண்டும் அவர் நிச்சயமாக போராடி, வேகமாக நல்ல உடல்நலத்திற்கு திரும்புவார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக சைதை துரைசாமி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அழகிரி, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மனைவி துர்கா, மூத்த மகள் செல்வி, மருமகள் மோகனா, எ.வ. வேலு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

பிற்பகல் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாலர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் கலைஞரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் மேற்பார்வையில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில், இருக்க வேண்டும் என்ற நிலை மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் சனிக்கிழமை(28.7.18) இரவு 8 மணி அளவில் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் கலைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

​Kalaingar in Kauvery Hospital: Sauterday Updates