அதிமுக திராவிட இயக்கத்தின் அங்கமல்ல : நக்கீரன் இதழுக்கு கலைஞர் அளித்த சிறப்புப் பேட்டி (Kalaingar Karunanidhi Special Interview)

Kalaingar Karunanidhi Special Interview

______________________________________________________________________________________________________

 

கடுமையான போட்டி நிறைந்த தேர்தல் களத்திற்கு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் புறப்பட்டுக்கொண்டிருந்தார் கலைஞர். 92 வயது இளைஞரிடம் உற்சாகம் ததும்புகிறது. அந்த பரபரப்பான நேரத்திலும் நக்கீரனுக்கு நேரம் ஒதுக்கி கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்தார். முக்கால் நூற்றாண்டு கால பொதுவாழ்வு அனுபவம் கொண்ட இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரின் சிறப்பு பேட்டி…

 

நக்கீரன் :  தி.மு.க.வின்  தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பைப்  பெற்றுள்ள நிலையில், தமிழக அரசு ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் நேரடி மற்றும் மறைமுக கடன் சுமையில் இருக்கும்போது, தி.மு.க. வெற்றி பெற்று இவற்றை  நிறைவேற்ற வேண்டும் என்றால் கூடுதல் கடன்சுமை ஏற்படாதா?

 

karunanidhi in van

கலைஞர் : கூடுதல்  கடன் சுமை ஏற்படாது.  ஏற்கனவே  உள்ள கடன் சுமையைச் சிறிது  சிறிதா கக் குறைப்பதற்கும், புதிய கடன் வாங்காதிருப்ப தற்கும், தேர்தல் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தேவையான அளவுக்கு வருவாயைப் பெருக்கு வதற்குமான வழிமுறைகளையும் சுட்டிக்காட்டி யிருக்கிறோம்.

 

நக்கீரன் : ஆட்சி மாற்றம் தேவை என்கிற அளவிற்கு ஜெயலலிதா அரசின் மீது மக்கள் கோபம் கொள்ள காரணங்கள் இருக்கின்றனவா?

 

கலைஞர் : 2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டுள்ள 54 திட்டங்களில்  ஜெய லலிதா பதினைந்து சதவிகிதத் திட்டங்களை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்.   நிறைவேற்றிய வற்றுள் பெரும்பாலானவை இலவசங் கள். இந்த இலவசப் பொருள்கள் பய னற்றவை மட்டுமல்லாமல்,  ஆளுங்கட்சி  அமைச்சர்களின் பைகளை  நிரப்பிக் கொள்ளவே பயன்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் அல்ல; நடுநிலை ஏடுகளும், என்.டி.டி.வி. போன்ற ஊட கங்களுமே  வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.   ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை எவ்வித விளக்கமும் தரவில்லை. ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளில் வெறும் பத்து சதவிகித அறிவிப்புகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளன. ஜெயலலிதா சொல்வது எதையும்  செய்வதற்காகச் சொல்வதில்லை;  மக்களை ஏமாற்றுவதற்காகவே சொல் கிறார்  என்ற  ஆழமான  எண்ணம் தமிழகத்தில்  வெகுவாகப் பரவியிருக் கிறது.   இவ்வாறு  மக்கள் நலனுக்கோ, மாநில முன்னேற்றத்திற்கோ எதையும் நிறைவேற்றாத செயலின்மை, நிர்மூல மாக்கப்பட்டு விட்ட நிர்வாகம்,  எதிலும் லஞ்சம் -எப்போதும்  ஊழல் -கோடி கோடியாகக் கொள்ளை, சட்டம் – ஒழுங்கு சரிந்து விட்டதால் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரைச் சூழ்ந்திருக்கும்  பாதுகாப்பற்ற நிலை,  வீழ்ந்து விட்ட வேளாண்மை,  துவண்டு போய் விட்ட தொழில் துறை,  மீள முடியாத பிரச்சினைகளில் மீனவர்கள், நெருக்கடிக்குள் நெசவாளர்கள்,  வாட்டமடைந்திருக்கும்  வணிகர்கள், பாழ்படுத்தப்பட்டு விட்ட பள்ளிக் கல்வி, துயரத்தில்  உயர்நிலைக் கல்வி -இப்படி அனைத்து முனைகளிலும் படுதோல்வி யடைந்துவிட்டது ஜெயலலிதா அரசு.  இவைதான் ஆட்சிமாற்றம் -அவசர அவ சியத் தேவை என்கிற அளவுக்கு  ஜெய லலிதா அரசின் மீது  மக்களிடம் மிகக் கடுங்கோபம் ஏற்படக் காரணங்களாகும்.

 

நக்கீரன் :  33 வயதில் முதல் முறை எம்.எல்.ஏ. ஆன நீங்கள், 93 வயது நெருங்கும் நிலையில், 13-வது முறையாகத் தேர்தல் களத்தை சந்திக்கிறீர்கள். அலுப்போ சலிப்போ இல்லாத இந்த உற்சாக உழைப்புக்கு எது அடிப்படை யான காரணம்?

 

கலைஞர் :  தமிழுக்கும்,  தமிழக மக்களுக்கும் தொண்டு செய்வதற்கு வயது ஒரு தடையே  இல்லை. எல்லா காலத் திலும் எந்த வயதிலும் தொடர்ந்து உற்சாகமாகத் தொண்டு செய்யும்போது அலுப்போ சலிப்போ நிச்சயம் ஏற்படாது. இன்னும் சொல்லவேண்டுமென்றால்,  தொண்டறத்தினால் உண்டாகும் மகிழ்ச்சி யும், மன நிறைவும் வயதைக் குறைக்கும்.

 

நக்கீரன் : உங்களுக்குப் பிறகு அரசியலுக்கு வந்தவர்கள்கூட ஒருசில பதவிகளைக் கண்டபிறகு இந்த அரசியல் களத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒதுங்கிவிட்டார்கள். உங்களால் மட்டும் வெற்றி -தோல்விகளைக் கடந்து எப்படி தாக்குப் பிடிக்க முடிகிறது?

 

கலைஞர் : நான், வெற்றி கிட்டும் போது வெறியாட்டம் போடுவதில்லை; தோல்வி வரும்போது துவண்டு மூலையில் முடங்கிவிடுவதும் இல்லை. வெற்றி -தோல்வி  இரண்டையும்  ஒரே மன நிலையில்  எடுத்துக்கொள்வதால்,  எல்லா நிலைமைகளையும்  எண்ணித் துணிந்து தாக்குப்பிடிக்க முடிகிறது.

 

நக்கீரன் : ராஜாஜி போன்ற தலைவர்களை நீங்கள் எதிர்த்த காலத் திற்கும், இன்று உங்களுக்கு எதிராகப் புதுப் புது கட்சித் தலைவர்கள் வரிந்து கட்டும் காலத்திற்குமான அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

Kalaingar Karunanidhiகலைஞர் : மூதறிஞர் இராஜாஜி  போன்ற தலைவர்களை எதிர்த்து நின்ற போது, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும்போது ஏற்படும் உத்வேகமும், சதுரங்கம் விளையாடுவதற்குத் தேவை யான விவேகமும் மனதில் நிறைந்திருந்தன. ஆனால் இப்போது எனக்கு எதிராகப் புதுப் புதுக் கட்சித் தலைவர்கள் வரிந்து கட்டுவதைப் பார்க்கும்போது, “போயும் போயும்  மனிதனுக் கிந்த புத்தியைக் கொடுத்தானே’ என்றுதான் எண்ணத் தோன்று கிறது. யார் போற்றினாலும், எவர் புழுதிவாரித் தூற்றினாலும்  பாதை மாறாத என்னுடைய இலட்சியப் பயணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது; தொடர்ந்து செல்வேன்!

 

நக்கீரன் : இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனும் மாறி, மாறி கூட்டணி அமைத்திருந்தவர்கள் இப்போது தமிழகத்தின் வளர்ச்சியைக் கெடுத்தது திராவிட இயக்கம்தான் என்று கடுமையாக எதிர்ப்பதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

 

கலைஞர் : திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட் சியங்களை அறிந்திருப்பவர்கள், அ.தி.மு.க.வை, திராவிட இயக்கத்தின் அங்கமாகக் கருதமாட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை இழிவான பெயர்களில்  அழைப்பதைத் தவிர்த்து, “ஆதி திராவிடர்’ என்னும் பெயர், ஆதி திராவிடர்க்குக் குடி யிருப்புகள்  மற்றும் வீட்டு மனைகள், மீனவர் நலன், கள்ளர் சமுதாய முன்னேற்றம், பிற்படுத்தப்பட்ட  மற்றும் ஆதி திரா விடர் மாணவர்களுக்கு உதவி நிதி, மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம்  கட்டாயம்  என்ற நடைமுறை  மாற்றம், அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், சென்னை மாகாண சட்ட சபைக்கு மகளிரைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது நியமனம் செய்து கொள்ளவோ உரிமை, பெண்களுக்கு வாக்குரிமை, சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழில் கணினிப் புரட்சி, உயர் பதவிகளில் தமிழர்கள், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட  வாரியங்கள்,  அனைவருக்கும் இலவசக் கல்வி, போக்குவரத்துக் கழகங்கள், அனைத்துக் கிரா மங்களுக்கும் மின் இணைப்பு,  மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்குச் சொத்துரிமை  வழங்க சட்டம்,  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு  ஒதுக்கீடு என்று நீதிக் கட்சி மற்றும் கழக அரசுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சமூகப் புரட்சி,  தமிழ் வளர்ச்சி,  அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் சாதாரணமானவை அல்ல.

 

திராவிட இயக்கத்தின் திட்டங்களால்  பலனடைந்து வாழ்வில் முன்னேற்றம்  கண்டோருள் ஒரு சிலர், தங்களுடைய  முன்னேற்றத்திற்கான  பின்னணியை  மறந்து – மறைத்து,  தமிழகத்தின்  வளர்ச்சியைக் கெடுத்தது திராவிட இயக்கம்தான் என்று நன்றி மறந்த  வார்த்தைகளைச் சொல்வதுதான் “நவீன நாகரிகம்’ என்று  அவர்கள் நினைக்கிறார்கள் போலும்! “வாழ்க வசவாளர்கள்!’
 

நக்கீரன் : ஜெயலலிதாவுக்கு எதிரான குற்றச் சாட்டுகளைச் சொல்லும்போது கூட, இதையெல்லாம் தொடங்கி வைத்தவர் நீங்கள்தான் என்று உங்களை முன்னிறுத்துவதை எப்படிப் பார்க்கி றீர்கள்?

 

கலைஞர் : ஜெயலலிதாவை நேரடியாக விமர்சிக்கவும், அவர் மீது  தாக்குதல் தொடுக்கவும் அஞ்சி நடுங்கும் சிலர், என்னை விமர்சனம் செய்துவிட்டு, அதன் தொடர்ச்சியாகவே  ஜெயலலிதா விடம் நெருங்குகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல விழுப்புரம், பெரம்ப லூர் வழியாகச் செல்வதைத் தவிர்த்து புதுச்சேரி, கடலூர், தஞ்சை வழியாகச் சுற்றுப் பாதையில் செல்வதைப் போல இருக்கிறது.

 

நக்கீரன் : 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தை போட்டி யிட வைத்து, 37 இடங்களை வென்ற ஜெயலலிதா, இப்போது சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட் பாளர்களை நிறுத்தியிருக்கிறார். எம்.பி. தேர்தலில் ஒரு சீட்டுகூட வெற்றிபெற முடியாத தி.மு.க., இரண்டாண்டு கால இடைவெளியில் எப்படி அ.தி.மு.க.வை வென்று ஆட்சியைப் பிடிக்கும்?

 

கலைஞர் : எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கான ரகசியம் உங்களுக்குத் தெரியாததல்ல. 25 இலட்சம் போலி வாக்காளர்கள், தேர்தல் கமிஷ னோடு கூட்டணி அமைத்துக் கொண்டு  கடைசிக் கட்டத்தில்  144  தடை உத்தரவு, கொள்ளை அடித்த பணம்,  கட்டுப் பாடற்ற  பண விநியோகம் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகள், பத்திரிகா தர்மத்தைக் காவு கொடுத்து விட்டுக் கண்களை மூடிக்கொண்டு  ஆதரவளித்த  ஒருசில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள்  போன்றவைதான் அந்த வெற்றிக்குக் காரணங்கள். இப்போது நிலைமையே வேறு. மக்களின் மனநிலையில் மிகப்பெரிய  மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.  “கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்குத் தான்’ என்பது பழமொழி. இப்போது அந்த எட்டு நாள்கள் முடிந்து விட்டன.  தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்கு நாள்தோறும் மக்களின் ஆதரவு  பன்மடங்கு பெருகி வருகிறது.    பொறுத்திருந்து பாருங்கள்! தி.மு.கழகம் நிச்சயமாக ஆட்சிப் பொறுப்பேற்கும்.

 

நக்கீரன் : ஒப்பீட்டளவில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிடுகின்ற நிலையில், பல கட்சிகளின் வருகை களை எதிர்பார்த்திருந்த தி.மு.க. தற்போது அமைத்துள்ள கூட்டணி, வெற்றிக் கணக்கிற்கு ஏற்றதாக உள்ளதா?

     

கலைஞர் : தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்பார்ப்ப தனைத்தும்  எப்போதும் நடந்து விடுவ தில்லை.  தி.மு. கழகத்தைப் பொறுத்த வரை, தற்போது அமைத்துள்ள கூட் டணி, மிகப் பெரும் வெற்றிக்கு உறுதியாக இட்டுச் செல்லும். 

   

நக்கீரன் :ஐந்து முறை முதல்வராக இருந்த நீங்கள், செய்ததில் எவற்றை முக்கிய சாதனைகளாகக் கருதுகிறீர்கள்? ஆறாவது முறை முதல்வராகும் வாய்ப் பைப் பெறும்போது எதனை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?

 

கலைஞர் : முதல்வராக இருந்த ஐந்து முறையும்,  தமிழகத்தின் முன்னேற் றத்திற்கும்,  தமிழ் மக்களின் மேம்பாட்டுக் கும்  நான் செய்த சாதனைகள் ஏராளம்.  அவற்றில் பல சாதனைகள் முன்னோடி யான சாதனைகள்; இந்தியாவிலேயே முதல்முறையாக நிறைவேற்றப்பட்ட சாதனைகள். அனைத்துமே  முக்கியமான சாதனைகள்தான். ஆறாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு வரும்போது, கழகத்தின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப் பட்டுள்ள அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதோடு, தமிழக மக்களுக்கு நிம்மதியான நல்வாழ்வு கிடைத்திடத்தக்க  நடவடிக்கைகளை annakaruna எப்போதும்போல அர்ப்பணிப்பு  மனப் பான்மையோடு மேற்கொள்வேன்.

 

நக்கீரன் : தி.மு.க. பொருளாளர்  மு.க.ஸ்டாலினிடம் தலைமைப் பொறுப்பை எப்போது அளிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலும் அதிகரித்திருக்கிறதே? ஏன் காலதாமதம்?

 

கலைஞர் : நடக்கவேண்டியது  நடக்கவேண்டிய நேரத்தில்  நிச்சயமாக நடக்கும்.  இதில்  யாரும் காலதாமதம் என்று  கருதவோ, அவசரப்படவோ தேவையில்லை.

 

நக்கீரன் : 1967-ல் தி.மு.க மேற்கொண்ட தேர்தல் பணிக்கும், 2016-ல் நடக்கும் தேர்தல் பணிக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்? அப்போதிருந்த வேகம் இப்போது உள்ளதா?

 

கலைஞர் : 1967-ல்  எனக்கு 43 வயது;  2016-ல்  எனக்கு 92 வயது.  1967-ல் அண்ணா இருந்தார்; அவருடைய கட் டளை கேட்டுக் காரியமாற்றினோம்.  அப்போது விவேகத்தை விட  வேகம் மிகுந்திருந்தது;  இப்போது வேகத்தை விட விவேகம் மிகுந்திருக்கிறது.

 

நக்கீரன் : இந்தியாவின் மூத்த தலைவரும் தமிழகத்தின் மூத்த வேட்பாளருமான நீங்கள், ஒரு வாக்காளராக இந்தத் தேர்தல் களத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?

 

கலைஞர் : மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வாக்காளராக இருப்பதில் நான் உண்மையிலேயே  பெருமைப்படு கிறேன்.  வாக்களிக்கும்போது,  யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று பகுத்தாய்ந்து ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

சந்திப்பு : கோவி.லெனின்
படங்கள் : அசோக்

நன்றி : நக்கீரன் இதழ்

_______________________________________________________________________________________________________

நாத்தியிடம் ருசி பார்க்கச் சொல்லும் சுந்தரராமசாமி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

அரசியல் பேசுவோம் -12 – தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

Recent Posts