Kalanidhi’s FB status
_____________________________________________________________________________
என்னுடைய மாமன்னர் ஒரு புனிதப் போருக்கு அழைப்பு விடுத்தபோது, நான் தொலைக்காட்சியின் முன்புதான் அமர்ந்திருந்தேன்.
கறுப்புப் பணம் என்கிற பேயிடமிருந்து இந்த தேசத்தை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் விவரித்தபோது, அவரது வெண்கொற்றக்குடையின் கீழுள்ள இந்த தேசத்திற்கு இப்படியொரு சோதனையா என அதிர்ந்துபோனேன்.
கறுப்புப் பண முதலைகளை ஒழிக்க என்போன்ற கடைசி நிலைக் குடிமக்கள் செய்ய வேண்டிய ஈகங்கள், முன்னெடுக்க வேண்டிய போர்கள் குறித்து அவர் அறைகூவல் விடுத்தபோது என் நரம்புகள் முறுக்கேறின; புயங்கள் துடித்தன. இந்த தேசத்தின் நலன் கருதி, இந்தப் போரில் ஈடுபடுவதென்று நானும் உறுதிபூண்டேன்.
என் போலவேதான், என் மாமன்னரும் மிக உறுதியோடு இந்தப் போரை முன்னெடுக்கிறார். கறுப்புப் பணப் போரை அறிவித்தவுடன், அவர் அயல் தேசங்களுக்குச் சென்று, அங்கிருந்து அவர் போரைத் தொடங்கினார். அயல் தேசங்களில் ஆடம்பர மாளிகைகளில் இருந்தபடி, போரில் முழுமூச்சாக அவர் ஈடுபட்டிருப்பதால், உள்நாட்டில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில்கூட அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.
அவரது தளபதிகள் இட்ட கட்டளைகளின்படி, என்போன்ற குடிமக்கள் உள்நாட்டில் கறுப்புப் பணத்திற்கு எதிரான போரை நடத்திக் கொண்டுள்ளோம். இது கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருக்கிறது.
மாதக் கடைசியில் மனைவி எழுதிக் கொடுத்த செலவுப் பட்டியல், இன்னமும் என் சட்டைப் பையில் கசங்கிக் கிடக்கிறது. அதில், வீட்டுக்கு வாடகை, வாங்கிய கடனுக்கு வட்டி, மின் கட்டணம், தொலைக்காட்சிக் கட்டணம், பால் பணம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், குழந்தைக்கான கல்விக் கட்டணம், ஊர்திக்கான எரிபொருள் எனப் பட்டியல் நீள்கிறது. கையிலிருக்கும் பணத்தில் பாதிச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாது.
இந்நாட்டின் நிதியமைச்சர்கள் கிழித்த கோட்டை நான் ஒருபோதும் தாண்டியவனில்லை. என்னுடைய எல்லா கொடுக்கல் வாங்கலும் வங்கியின் மூலமே நடைபெற்று வந்திருக்கிறது. கையேந்தும் பாட்டிகளுக்கு பிச்சையிடுவதைக்கூட காசோலை மூலம் செய்ய முடியுமா என யோசிப்பவன் நான். எனவே இப்படிப்பட்ட போர்க்காலத்தில் நான் வங்கிக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
நான் முதலில் சென்ற வங்கியில் நீண்டது வரிசை. அடுத்து சென்ற வங்கியில் வரிசை நீண்டது. அங்கே பலரும் நாலாயிரம் ரூபாய் கிடைக்குமா என நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ஓதியபடி வரிசையில் நின்றிருந்தார்கள். சரி, பரவாயில்லை என நானும் கடைசியில் ஒருவனாக நின்று கொண்டேன்.
வரிசை நகர்ந்து சில நாட்களுக்குப் பிறகு வங்கிக்குள் சென்றால், நீங்கள் வரிசையில் நின்ற நாளில் நாலாயிரம் ரூபாய்; நீங்கள் வங்கிக்குள் நுழைந்த நாளில் நாலாயிரத்து ஐந்நூறு ரூபாய்; கையில் மை வைக்கும் இன்றைய நாளில் இரண்டாயிரம் ரூபாய்தான் என்றார்கள்.
எனக்கு வருத்தமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் என் பக்கம் கேமிராவைத் திருப்ப, தலைமுடியைச் சரி செய்துகொண்டு சிரித்துக் கொண்டே மை வைத்துக் கொண்டேன்.
பின்னர் வேரொரு வங்கிக்குச் சென்றேன். லத்தியால் அடித்தார்கள். இன்னொரு வங்கியில் என் பிட்டத்தில் சூடு வைத்தார்கள். மற்றொரு வங்கியில் செருப்பால் அடித்தார்கள். ஊர்க் கடைசியில் இருந்த வங்கியில் இவை அனைத்தையும் செய்துவிட்டு பணம் இல்லை என்றார்கள்.
எதையும் தாங்கும் இதயம் எனது. மானமென்ன? மரியாதை என்ன? தேசத்தின் நலன் தானே முக்கியம்?
இரண்டாயிரம் ரூபாயோடு வீட்டுக்கு வந்தேன். என்போன்ற தேசபக்தி மிக்க ஒருவனால் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்த எப்படி மனசு வரும்? எனவே வீட்டுக்குத் தேவையானவற்றை அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன். மனைவி அதிர்ச்சியோடு ஏறிட்டாள்.
போரா, சோறா எனக் கேள்வி வரும்போது, நான் போரின் பக்கமே நிற்க விரும்புவதாக மனைவியிடம் சொன்னேன். அவள், உங்களின் போர் முடிந்தவுடன் சொல்லி அனுப்புங்கள், வருகிறேன் என்று சொல்லிவிட்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்குப் போய்விட்டாள்.
அப்போது தொலைக்காட்சியைத் திருப்பினேன். என்னைவிடவும் வறுமையில் உழலும் மல்லையாவுக்கும் மற்றும் பலருக்கும் கடன் தள்ளுபடி செய்துவிட்டதாகச் சொன்னார்கள். அடிமனதில் லேசாக ஒரு ஏமாற்றம் வரத்தான் செய்தது.
‘இந்தியா என் தாய்நாடு. இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்’ என என் பள்ளிப் பிராயத்தில் படித்த இறையாண்மை வாசகம் அந்த நேரம் பார்த்து என் நினைவுக்கு வந்து தொலைந்தது.
நம் சகோதரர்களுக்காக விட்டுக் கொடுப்பது தவறில்லையே என்ற எண்ணம் வந்தது. தேசத்துக்காக விட்டுக் கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிதில்லையே! ஏற்கனவே எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்த அனுபவமும் எனக்கு உண்டு.
சீக்கிரமே போர் முடிந்தவுடன் மனைவியை அழைத்து வந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கச் சென்றேன்.
ஜெய்ஹிந்த்
நன்றி : கலாநிதியின் முகநூல் பதிவில் இருந்து….
__________________________________________________________________________________