முக்கிய செய்திகள்

இந்த வெயிலிலும் உங்கள் ஊர் பையனைப் பார்க்க காத்திருக்கிறீர்கள்: சொந்த ஊரில் கமல் நெகிழ்ச்சி..


ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் தன் சொந்த ஊரான பரமக்குடிக்கும் சென்றார்.

மதுரை பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் தனது சொந்த ஊரான பரமக்குடியில் மக்கள் மத்தியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

கமல் வருகையை எதிர்நோக்கி ரசிகர்கள் அங்கு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி பரமக்குடிக்கு வாகன அணிவகுப்பு வந்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பொதுக்கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை தவிர்த்து வாகனத்திலிருந்தே பேசினார்.

அப்போது, “எவ்வளவு அன்பிருந்தால் உங்கள் ஊர் பையனைப் பார்க்கக் காத்திருப்பீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. மீண்டும் உங்களிடம் வருவேன். மதுரையில் நடக்கும் நிகழ்வுக்கு வரும் டெல்லி முதல்வரை வரவேற்கச் செல்வதால் உடனடியாகக் கிளம்பிச்செல்கிறேன். மீண்டும் உங்களிடம் பேசுவேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.