மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு: எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு

மத்தியப் பிரதேச முதலமைச்சராக அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்க உள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கான 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 109 இடங்களில் வென்றுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் மாநிலத்தின் முதலமைச்சராக மூத்த தலைவர் கமல்நாத்தை தேர்வு செய்யப்படுவாரா, அல்லது செல்வாக்கு மிக்க இளையதலைமுறைத் தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி நிலவி வந்தது.

அவர்கள் இருவருமே டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்தனர். பின்னர் டெல்லியில் இருந்து இருவரும் போபால் திரும்பினர். போபாலில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்திற்கு பின்னர், கமல்நாத் முதலமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கமல்நாத்தின் ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.