களைகட்டிய கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு …


சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் பொங்கல் விழா நடைபெற்றது. அந்தோணியாருக்குப் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு விழா என கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து சமத்துவமாக நடத்துகிறார்கள் என்பதுதான் இதன் சிறம்பம்சமே. மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டை காண வரும் வெளியூர் பார்வையாளர்கள் அனைவரையும் கையெடுத்துக் கும்பிட்டு சாப்பிட அழைக்கிறார்கள்.

வீடு தோறும் ஐந்து வகை பொரியலோடு அறுசுவையான சைவ உணவு பரிமாற்றம் செய்து பார்வையாளர்களை சந்தோசப்படுத்துகிறார்கள். எங்கள் ஊர் ஜல்லிக்கட்டை காண வரும் பார்வையாளர்கள் யாரும் வயிற்றுப் பசியோடு செல்லக் கூடாது என்பது எங்கள் நோக்கம் என்கிறார்கள் அக்கிராம மக்கள். இது கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த ஊரில் பிறக்கும் முதல் குழந்தைக்கு அந்தோணியார் கோயிலில் மொட்டையடித்து, கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வருகிறார்கள். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மாடுகளை மேளதாளத்தோடு மாலை மரியாதை செய்து அழைத்து வருகிறார்கள். இந்த விழாவை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுரசித்தனர்.

மேலும் இவ்விழாவின் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக நான்கு டி.எஸ்.பிக்கள், ஒரு எஸ்.பி தலைமையில் 650 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். பாதுகாப்பு இல்லாமல் ஆங்காங்கே மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் 43 பேர் காயமடைந்தார்கள்.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 12 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட விழா அன்று நடந்த இச்சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.