கனிமொழி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்: பழைய வீடியோ என்று சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள்..

தேர்தலுக்கு முந்தைய பழைய வீடியோவை வைத்து கனிமொழி மீது தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்தது.

ஆனால் அது பழைய வீடியோ என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

தலைமைச் செயலகத்திலுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம் அதிமுக சார்பில் அதன் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பணத்தை வாரி இறைக்கும் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார்.

அவர்களது புகாரில், ”திமுகவின் தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழியும் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்னும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது குற்றமாகும்.

இது விதிமுறைகளுக்கு எதிரானது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்ட கனிமொழியின் நாடாளுமன்ற வேட்புமனுவை நிராகரிக்க அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.

அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தாக தகவல் வெளியானது.

புகார் அளித்த பின்னர் வெளியே வந்த இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காட்டிய வீடியோ ஆதாரத்தைப் பார்த்த செய்தியாளர்கள் இது பழைய வீடியோ என தெரிவித்தனர்.

இல்லை. இது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பணம் வழங்குபோது எடுத்த வீடியோ என இன்பதுரை தெரிவிக்க, இல்லை

இது கிராமசபை கூட்டத்துக்குச் செல்லும்போது கனிமொழிக்கு ஆரத்தி எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ. இதை நாங்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பார்த்துவிட்டோம் என செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த இன்பதுரை அப்படியா என கேட்டுவிட்டு, புகார் அளித்த செய்தியையாவது போடுங்கள் என சொல்லிவிட்டுச் சென்றார்.

தேர்தலை ஒட்டி சமூக வலைதளங்களில் உண்மையான செய்திகளைவிட போலியான செய்திகள்தான் அதிகம் உலா வருகின்றன.

நேற்று மு.க.அழகிரி- எச்.ராஜா சந்திப்பு என ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் பரப்பி விடப்பட்டது. அதற்கு மு.க.அழகிரி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முகநூல் பதிவு போன்று சித்திரைத் திருவிழா நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன என்ற பதிவை வைத்து சிலர் கொந்தளித்தார்கள்.

சு.வெங்கடேசன் பதிவு போல் போலியாக அதைப் பதிவு செய்த நபர் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர். இதுபோன்ற போலிப் பதிவுகளை ஆராயாமல் அதை தேர்தல் அதிகாரி வரை அதிமுகவினர் கொண்டு வந்து புகாரும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி ஆறு பேர் உயிரிழப்பு..

பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் அமமுக சார்பில் மனு..

Recent Posts