திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ட்விட்டர் போன்று போலி ட்விட்டர் பதிவுகளை மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பதிவு செய்து வலைதளங்களில் பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கனிமொழி சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவருக்கு எதிராக அவதூறாகவும், கட்சியினர் மனம் புண்படும்படியாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் இதுபோன்ற அவதூறு பதிவு செய்பவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு அவதூறாக கருணாநிதிக்காக பிரார்த்தனை செய்து பிரசாதம் அனுப்புவது பற்றியும், கோவிலில் பெண்கள் நுழைவது குறித்தும் கனிமொழி ’ஆணவமாக’ தனது ட்விட்டரில் பதிவு செய்தது போல் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை வாட்ஸ் அப், முகநூலில் பரவ விட்டுள்ளனர்.
கனிமொழியைப்பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தும் விதமாக இப்பதிவுகள் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. கனிமொழி கடந்த 24-ம் தேதி கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராளுமன்ற உரை குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் கருணாநிதியின் உடல் நிலை காரணமாக எந்த பதிவையும் பதிவிடவில்லை. ஆனால் விஷமிகள் திட்டமிட்டு இவ்வாறு பரப்புவதாக கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இது குறித்து சமபந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம் இன்று காவல் ஆணையரை சந்தித்து கனிமொழிக்கு எதிராக பரப்பட்டுவரும் போலி ட்விட்டர் பதிவுகளுடன் புகாரை அளித்தார்.
அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:
“திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். கனிமொழி தனது தந்தை கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக தனது ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் அவர் டிவிட்டர் போன்று போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் “உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையை எநத் ஆன்மீகவாதியும் வந்து பார்க்கவேண்டிய அவசியமில்லை, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அனுப்பிய விநாயகர் பிரசாதத்தைக்கூட குப்பையில் தூக்கி எரிந்துவிட்டேன். அதேபோல் திமுக தொண்டர்கள் யாரும் மொட்டையடித்தல், கோவில் வழிபாடு போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட கூடாது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக நாத்திக கருத்துகளை தனது சித்தாந்தத்தில் கடைபிடிக்கிறது, ஆனால் அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்க அண்ணா, கருணாநிதி ஆகியோர் திமுக தொண்டர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.அதனை கனிமொழி தனது அரசியல் வாழ்வில் வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் எந்த மதத்திற்கும் விரோதி கிடையாது. இவ்வாறு இருக்கையில் மேற்படி செய்திமூலம் இந்துக்களிடம், கனிமொழி மீது விரோதத்தையும், குரோதத்தையும் உருவாக்கவும், இந்துக்களுக்கும் அவருக்குமான பந்தத்தை பிரிக்கவும் சதித்திட்டம் தீட்டப்பட்டு செய்திகள் பரப்பப்படுகிறது.
பெண்கள் கோவிலுக்கு செல்வது குறித்தும், மாதவிடாய் காலம் குறித்தும் கனிமொழி பதிவிட்டதாக போலி ட்விட்டர் பதிவு பரப்பப்படுகிறது. இதுபோன்ற ஆட்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.