முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி கனிமொழி ,ஆ.ராஜாவுக்கு வாழ்த்து..


2ஜி தீர்ப்புக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசிர்வாதம் பெற வந்த கனிமொழியிடம் ”பேராசிரியர் எங்கே?” என்று கருணாநிதி கேட்க, இதோ இங்கே இருக்கிறார் என்று கனிமொழி காண்பித்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

2ஜி வழக்கில் இருந்து திமுக எம்.பி., கனிமொழி, மத்திய முன்னாள் அமைச்சர் ஆர். ராசா விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினர். விமான நிலையத்திற்கு சென்று இவர்கள் இருவரையும் வரவேற்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார்.

விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்களை சந்தித்த ராசா மற்றும் கனிமொழி இருவரும் நேராக, கோபாலபுரம் வந்து திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.

அப்போது, கனிமொழிக்கு முத்தம் கொடுத்த கருணாநிதி, ”பேராசிரியர் எங்கே?” என்று கேட்டார். உடனே, கனிமொழி, ”இதோ இங்கே பேராசிரியர்” என்று அவருக்கு காட்டினார். பேராசியர் அன்பழகனைப் பார்த்து கருணாநிதி சிரித்தார். இது அங்கு குழுமி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.