இறைவன் சிவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்தான் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.
புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இந்தாண்டு திருவிழா நேற்று இரவு மாப்பிள்ளை அழைப்புடன் திருவிழா தொடங்கியது.
அதைத்தொடர்ந்து இன்று (1ம்தேதி) காலை 11 மணியளவில் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்திற்கு மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து குதிரை வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். பின் புனிதவதியார் சந்திர புஷ்கரணியில் நீராடி பட்டாடை உடுத்தி திருமண கோலத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து பாரம்பரியப்படி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாரை, மணமகள் வீட்டார் கவுரவித்து தாம்பூலம் மாற்றி புனிதவதி அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாளை காலை சுவாமி வீதியுலா, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.