சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கழகத்தில் (CECRI) நிறுவன நாளான செப்.26-ந் தேதியை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக்கான பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஏராளமான பள்ளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு வியந்தனர்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.,) இயங்கி வருகிறது.
அதன் கீழ் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு கழகம் (சிக்ரி) உள்ளிட்ட நாடு முழுவதும் 37 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.
சி.எஸ்.ஐ.ஆர்., 1942 செப்டம்பர் 26ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நாள் நிறுவன நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதனை முன்னிட்டு காரைக்குடி சிக்ரியில் நேற்று 83&ம் ஆண்டு பார்வையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டது. காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொதுமக்கள் மாணவர்கள் சிக்ரியின் அறிவியல் கண்டுபிடிப்புகளை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி அறிவியல் படிப்பு சார்ந்த மாணவர்கள் சிக்ரியின் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து பார்வையிட்டு, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
இதில் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்சிஜன் என தனி தனியாக பிரித்து எடுத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம், 25 வருடம் பயன்பாட்டில் இருக்கும் வகையில் பேட்டரி தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி மற்றும் அறிவியில் கண்டுபிடிப்புகள் காட்சிபடுத்தப்பட்டு கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக மூத்த விஞ்ஞானி வாசுதேவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மூத்த விஞ்ஞானிகள் மதியரசு, ஜோனாஸ் டேவிட்சன், நிர்வாக அலுவலர் ஷ்யாம் சுந்தர் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
செய்தி& படங்கள்
சிங்தேவ்