காரைக்குடியில் புதியதாக தொடங்கப்பட்ட அரசு சட்டக்கல்லுாரியின் புதிய கட்டிடத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான திரு.ப.சிதம்பரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற,உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டடத்திற்கான பூமி பூஜையினை துவக்கி வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் இன்று (03.02.2024), மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் ஆகியோர், காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டடத்திற்கான பூமி பூஜையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.மாங்குடி (காரைக்குடி), திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), சட்டத்துறை செயலர் திரு.எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் திருமதி ஜெ.விஜயலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ. மோகனசந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.சோ.பால்துரை, அரசு சட்டக்கல்லூரி முதல்வர் (பொ) திரு.ந.ராமபிரான் ரஞ்சித்சிங், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.பெ.செந்தில் குமார், முன்னாள் அமைச்சர் திரு.தென்னவன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் திரு.முத்துத்துரை, துணைத்தலைவர், திரு.நா.குணசேகரன், உதவி செயற்பொறியாளர் திரு.சி.பாண்டியராஜன், உதவிப்பொறியாளர்கள் திரு.கி.சந்தோஷ்குமார், திருமதி ச.திவ்யா, ஒப்பந்தகாரர் திரு.குழந்தை ராஜ் & கோ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில்,
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், சட்ட கல்லுாரி அமைவதற்கென ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்து, சட்ட கல்விக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அதனடிப்படையில் அப்புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை இன்றையதினம் இங்கு சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.
இப்புதிதாக சட்டக்கல்லூரி அமைப்பதற்கென, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் அவர்களும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் சட்ட கல்லுாரி கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பாக சட்டப்படிப்பு விளங்கி வருகிறது. மகளிர் படித்து முன்னேற்றம் காணும் போது நாடும் முன்னேற்றமடையும். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அனைத்து படிப்பு பிரிவுகளிலும், மாணவர்களை விட அதிக அளவில் பெண்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு திகழ்ந்து வருகிறது. இச்சட்டகல்லூரியிலும் கூட ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். சட்டக்கல்விக்கு என்று பல்கலைக்கழகம் அமைத்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆவர்.
மக்களுக்கான நம்பிக்கை நீதிமன்றமாக திகழ்கிறது. மக்களின் அடிப்படை மற்றும் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நீதிமன்றங்கள் அடிப்படையாக திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் நல்ல முறையில் சட்ட கல்வியினை பயின்று, அதிக மதிப்பெண் பெற்று,
தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி, உங்களின் பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எதிர்கால தூண்களாக விளங்கிவரும் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வியை பெறவேண்டும் என்ற அடிப்படையில் எட்டா கனியாக இருந்த கல்வியை கிராமப்புற மக்களும் பெறவேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதிதாகவும் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி கற்றிடவும் வழிவகை செய்துள்ளார்கள். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சட்டக் கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது. பொறியியல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு இணையாக சட்டக்கல்வி படிப்பும் தற்போது முக்கிய அங்கம் வகிக்கின்றது.
அதன்படி, காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கு, சொந்த கட்டடத்தில் அமைவதற்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிப்பட்டு, அதற்கென ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை விழாவும் இன்றைய தினம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், 5 ஆண்டு சட்டப்படிப்பும், 3 ஆண்டு சட்டப்படிப்பும் படிக்கின்ற வகையில் இக்கல்லூரியானது இயங்கி வருகிறது. இச்சட்டக்கல்லூரியில் மொத்தம் 285 மாணாக்கர்கள் தற்போது பயின்றுவருகின்றனர் அதில் 136 மாணாக்கர்கள் நமது சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியதாகும். இந்நிகழ்ச்சியின் வாயிலாக மாநிலங்களைவை உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு.ப.சிதம்பரம் அவர்கள், அரசு கால்நடை கல்லுாரியும் புதிதாக அமையவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள். முன்னதாக, அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில், இப்புதிய சட்டக்கல்லுாரி மற்றும் வேளாண்மை கல்லுாரிஅமையபெற்றது.
அதே போன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு இதனையும் எடுத்துச்சென்று அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுகின்ற வகையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற வகையிலும் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்று செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, மாணாக்கர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார்.
மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் பொருட்டு, காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு புதிய அரசு சட்டக்கல்லூரியினை நிறுவியுள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளதைத் தொடர்ந்து, தற்போது சட்டக்கல்லூரியும் சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்று, சட்டக்கல்லுாரிக்கென ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் அமைவதற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து, அக்கட்டிட துவக்க பணிகளும் இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. இவை நாம் அனைவரும் பெருமை கொள்ளும் விதமாக அமைகிறது. இதற்கு வழி வகுத்துத்தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்ந்து, மாணாக்கர்களிடையே சட்டக்கல்வி மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் மிகுந்த அளவில் சட்டக்கல்லூரியில் சேர்ந்து நல்ல முறையில் பயின்று, சட்டத்துறையில் சாதனை படைக்க வேண்டும். சட்டக் கல்வி பயின்ற பெண்கள், தற்போது அதிகளவில் நீதிபதிகளாக உள்ளனர்.
முந்தைய காலங்களில் மகாபாரதத்தில் பாஞ்சாலியும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், சிறந்த பெண் வழக்கறிஞர்களாக திகழ்ந்துள்ளனர். அதேபோன்று சட்டகல்வி பயின்றுவரும் மாணவியர்களும் சிறந்து விளங்கிட வேண்டும்.
சட்டக்கல்வியினை மாணாக்கர்கள் பயில்வதன் மூலம் உயர்ந்த நிலையை எட்ட முடியும். புகழ்பெற்ற கல்வி நகரங்களில் காரைக்குடியும் ஒன்றாக திகழ்கிறது. தற்போது வேளாண்மை கல்லுாரி, சட்டகல்லுாரி அமைந்துள்ளதை போல் அரசு கால்நடை கல்லுாரியும் அமைவதற்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டுமென இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். நமது மாவட்டத்தில் இதுபோன்று இன்னும் புதிதாகவும் பல்வேறு அரசு கல்லூரிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசில் தொடங்கி, மாணாக்கர்களின் எதிர்கால நலனிற்கு அடிப்படையாக உருவாக்கி தர வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் திரு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்