நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துதுரை,நகரமன்ற துணை தலைவர் குணசேகரன், அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் ரவி, சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் , அரசு அதிகாரிகள், காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர்கள், காரைக்குடி நடையாளர் கழகம், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக நுழைவு வாயில் தொடங்கி அழகப்பா கல்லுாரிகள் வழியே ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் வரை நடைப்பயிற்சி நடைபெற்றது
இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறைகள், இருக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகளவில் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் மாங்குடி காரைக்குடி கல்லுாரி சாலையின் இருபக்கங்களிலும் நடைபாதை அமைக்க கோரியிருந்தார். விவாதத்திற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு சிவகங்கை மாவட்டம் வரும் போது சாலையைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்னும் திட்டத்தின் மூலம் கல்லுாரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழக நுழைவு வாயில் தொடங்கி அழகப்பா கல்லுாரிகள் வழியே ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் வரை நெடுஞ்சாலைத்துறை சர்வதேசத் தரத்தில் சாலையின் இருபக்கங்களிலும் நடைபாதை நடைப்பயிற்சி தளம் அமைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் நோய் நொடி நீங்கி சுகாதாரத்துடன் வாழ்வதற்காக தமிழ்நாடு அரசின் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்னும் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ துாரம் கொண்ட நடைபயிற்சி மூலம் நலவாழ்வு பேணுவதற்காகவும், தொற்று அல்லாத நோய்களை தடுக்கவும், நிர்வகிக்கவும், உடல் ரீதியான சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றவும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடைப்பயிற்சி தளம் உருவாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்