சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புதிய அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை செய்ய காலதாமதம் ஆனதால் சிசு இறந்து பிறந்துள்ளது.
காரைக்குடி அரசு பொதுமருத்துவமனையில் கண்டனுாரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மனைவி மதுரா தேவி(வயது-24) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவ வலி அதிகரித்து பனிக்குடம் உடைந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்ய மகப்பேறு மருத்துவர் வரக் காலதாமதம் ஆனதால் கருவில் உள்ள சிசு இறந்த நிலையில் பிறந்துள்ளது.
காரைக்குடியில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் காரைக்குடி,தேவகோட்டை,மானாமதுரை,திருப்பத்துார் மற்றும் காரைக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் காரைக்குடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவத்தில் தினமும் குறைந்தது 25 முதல் 30 வரை குழந்தைகள் பிறக்கின்றன. நடுத்தர ஏழை மக்கள் அதிகம் இந்த அரசு பொது மருத்துவமனையை நாடிவருகின்றனர்.
மிகப் பெரிய கட்டிடங்கள்,அதிக மருத்துவபடுக்கைகள், நவீன மருத்துவ கருவிகள் கொண்ட மருத்துமனையாக இருத்து வரும் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள்,செவிலியர் இல்லாத நிலையே உள்ளது. பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் மகப்பறு இங்கு பிரசவத்திற்கு வரும் நிலையில் மகப்பேறு மருத்துவர்கள் போதிய நிலையில் இல்லை.
உரிய நேரத்தில் முறைான மருத்துவ சிகிச்சை கிடைத்திருந்தால் அந்த சிசுவைக் காப்பாற்றியிருக்கலாம்.இது போல் பல அவலங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. மருத்துவ மனையில் தொடரும் அவலம் குறித்து மருத்துவ அதிகாரி தருமர் இடம் தொலைபேசியில் கேட்ட போது போதிய மருத்துவர்கள் இருப்பதாகவும் இது குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.
காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு இடமாறுதல் கோரி பல மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென மருத்துவமனையில் உள்ளவர்கள் தெரிவித்தனர். மருத்துவ அதிகாரி தருமர் வேண்டுமென்றே இடமாறுதலை தள்ளிப் போடுவதாகவும் குற்றச்சாட்டுகின்றனர். அவர் மீது மருத்துவமனை வட்டாரத்தில் அதிக புகார்களைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களைத் தொடர்பு கொண்டபோது சிசு இறப்பு குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்த அவர் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை 2 முறை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளதாகவும்,அதுபோல் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மருத்துவ அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும் மருத்துவர் நியமனம் செய்யப்படவில்லை என்றார். நவீன வசதிகள் இருந்தும் காலதாமதத்தால் சிசு இறந்தது மிகுந்த வேதனையளிப்பதாகக் கூறினார். மேலும் இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர்,செயலாளர்,மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் முறையிட்டு போதிய மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.
தற்போதைய காலகட்டத்தில் குழந்தையின்மை அதிகரித்து வரும் நிலையில் கருவுற்று 10 மாதம் சிசுவைச் சுமந்து பிரசவ நிலையில் காலதாமத்தால் சிசு இறந்துள்ளது அந்த பெண்ணின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அதிகாரிகளின் அலச்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுகாதாரத்துறையும்,மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து மருத்துவர் பற்றாக்குறை போக்கவேண்டும்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்