கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்…

கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேரும், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் 3 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அவர்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் அளித்தனர். இதையடுத்து 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.

கடந்த 23-ஆம் தேதி அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இந்நிலையில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரானே பென்னூர் தொகுதி எம்.எல்.ஏ சங்கர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக கூறினார்.

சங்கர் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தமது கட்சியான கே.பி.ஜே.பியை காங்கிரசுடன் இணைத்ததையும், ஜூன் மாதம் 25ஆம் தேதி அவர் காங்கிரஸ் உறுப்பினர் என்று அறிவிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில்,

அவர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 16-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா கடிதம் கொடுத்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதன் பேரில் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் குறிப்பிட்ட கெடுவுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் சங்கரை தகுதி நீக்கம் செய்வதாகவும்,

இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கோகர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ரமேஷ் ஜார்கிகோலி,

அதானி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் மகேஷ் குமுதஹள்ளி ஆகியோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான அவர்கள் இருவரும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்குமாறும் சித்தராமய்யா பரிந்துரை செய்த தாக அவர் குறிப்பிட்டார்.

இதற்காக ஆதாரங்கள் இருப்பது உறுதியானதால் ரமேஷ், மற்றும் மகேசை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

மேலும் எம்.எல்.ஏக்கள் மூன்று பேரையும் நடப்பு சட்டசபையில் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்வதாக அவர் கூறினார்.

இதனால் சட்டசபை கலைக்கப்பட்டால் மட்டுமே மூன்று பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், இல்லாவிட்டால் வருகிற 2023 ஆம் ஆண்டு வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும்,

தகுதி நீக்க நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ல் இருந்து 221 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 12 பேரின் நிலை குறித்து சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இந்நிலையில் 105 உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க அறுதி பெரும்பான்மைக்கு இன்னமும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் ஆட்சி அமைப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

டெல்லியில் இன்று ஒரே நாளில் கர்நாடக பா.ஜ.க தலைவர்களுடன் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், செயல் தலைவர் ஜே.பி. நட்டாவும் ஆலோசனை நடத்திய நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.