கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது. இறுதி நேரத்தில் பாஜக வெளிநடப்பு செய்தது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் கால அவகாசம் வழங்கினார்.
எனினும் ஒருநாள் இடைவெளியில் பெரும்பான்மையை நிருபிக்க குமாரசாமி முடிவு செய்தார். அதன்படி. கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை கூடியது. முதல்கட்டமாக, சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சீனிவாசப்பூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமாரும், பாஜக சார்பில் போட்டியிடும் ராஜாஜி நகர் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் குமாரும் போட்டியிட்டனர்.
சபாநாயகர் தேர்வு நடைபெறுவதற்கு சற்று முன்பாக பாஜக வேட்பாளர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பிற்பகலில் அவை மீண்டும் கூடியது. முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்குகோரினார். பெரும்பான்மைக்கு 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதில் குமாரசாமிக்கு 78 காங்கிரஸ் உறுப்பினர்கள், 36 மஜத உறுப்பினர்கள், 1 பகுஜன் சமாஜ் உறுப்பினர் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவு அளித்தனர். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக எதிர்கட்சித் தலைவராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்