கர்நாடக ஆளுநருடன் குமாரசாமி, காங். தலைவர் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்..


கர்நாடக அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நிலையில், மஜத தலைவர் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு ஏதுவாக, மஜத மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.