என் இனிய அப்பா…!: தந்தை குறித்து ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வனின் நெகிழ்வுப் பதிவு

ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வன்

7 வது அண்ணா…

அப்பா பணியாற்றிய காந்தி கலா நிலையம் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல… காவனூர் கிராமத்திற்கே அவர் 7 வது அண்ணா தான். ஆசிரியர்களை அண்ணா என்று அழைப்பது இன்று வரை தொடர்கிறது.

18 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அவர் எங்களை பிரிந்தார். கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தனது உடல் உபாதைகளுக்கு இடையே சிறு புன்னகையோடு என் கையை சில நிமிடங்கள் பிடித்திருந்தவருக்கு அது தன் வாழ்வின் கடைசி நிமிடங்கள் என்று தெரிந்திருக்கும் போல… மருத்துவர் என்னை வெளியே அனுப்பிய தருணத்தில் ‘கவலைப்படாதே தம்பி’ என்று பலவீனமான குரலில் என்னை அனுப்பி வைத்தார் அப்பா… பிறகு மருத்துவர்தான் வெளியே வந்தார்… அப்பா வரவே இல்லை..

வீட்டிற்கு பின்னால் தோட்டத்திலேயே அப்பாவை நல்லடக்கம் செய்து சிறிய அளவில் நினைவிடம் உருவாக்கியிருக்கிறோம்.

நல்லடக்கம் முடிந்த சில நாட்கள் கழித்து காவனூரில் இருந்த வாடகை வீட்டை காலி செய்தோம். எல்லா பொருட்களையும் வேனில் ஏற்றிய நண்பர்களும், சித்தப்பாவும் பீரோவை திறக்கும்போது என்னை அழைத்து லாக்கரில் இருக்கும் பொருட்களை தனியே எடுத்து பத்திரப்படுத்த சொன்னார்கள்.

ஊடகவியலாளர் கார்த்திகைச்செல்வன்

லாக்கரில் விலை உயர்ந்த பொருட்களும், நகைகளும் இருக்கும் என்கிற கணிப்பில் என்னை வைத்து திறக்க சொன்னார்கள்….

லாக்கரில் நானே எதிர்பாராத அளவிற்கான விலை உயர்ந்தவற்றை பத்திரப்படுத்தியிருந்தார் அப்பா… 
பக்கம் பக்கமாய் நான் அவருக்கு எழுதிய கடிதங்கள், நானும் தங்கையும் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் அங்கே இருந்தன.

நான் பல சந்தர்ப்பங்களில், பலவிதமான மன நிலையில் எழுதிய கடிதங்களை மீண்டும் ஒரே நேரத்தில் படிக்கும் போது எழுந்த உணர்வுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை…

ஆசிரியராக அவர் பெயர் சொல்ல நிறைய பிள்ளைகளை உருவாக்கியிருந்தார்… ஆனால் பிள்ளையாக அவர் பெருமைப்பட அவர் இருந்த வரையில் நான் எதுவும் செய்ததாக நினைவில்லை. சக ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பு, வேலை என பெருமையாக பேசும் போது அவர்களின் உற்சாகத்தில் தானும் பங்கெடுப்பார்… ஆனால் என் குறித்து பெருமையாக சொல்வதற்கு நான் எதையும் செய்திருக்கவில்லை அவருக்கு…

புத்தகம் படிச்சுகிட்டு, ஊர் பிரச்னை பேசிக்கிட்டு, சோஷியல் சர்வீஸ்னு சுத்திகிட்டு இருக்கான்… எப்போ செட்டில் ஆகப்போறான்னு தெரியலை என உறவுகளும், அப்பாவின் நண்பர்களும் (அக்கறையோடுதான்) என் குறித்து நம்பிக்கை இழந்து பேசும் போதும் நம்பிக்கையோடு இருந்தார் அப்பா…

பல வருடங்களுக்கு பிறகு…இப்போது.. அப்பாவைத் தெரிந்த பலரும், 7 வது அண்ணா பையனா நீங்க… ரொம்ப பெருமையா இருக்கு என்று சொல்லும் போதெல்லாம் அப்பாவின் இழப்புதான் அதிகமாகிறதே தவிர மகிழ்ச்சி வருவதில்லை…

வெற்றி என்று பெரிதாக எதையும் அடையாவிட்டாலும்… சிறிய அளவிலான அங்கீகாரமோ, பாராட்டுதலோ கிடைக்கும்போதும் அப்பா நினைவுதான் வரும்.

அருணா சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி காலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேச வந்திருந்த எம்.எஸ். உதயமூர்த்தியோடு நான் விவாதம் நடத்தியதையும்.. அது குறித்து உதயமூர்த்தி அவர்கள் பாராட்டியதையும் பெருமை பட பேசிக்கொண்டே இருந்தவர் அப்பா…

தாயுமானவராக அப்பாக்கள் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை… அப்படி அமைந்த தன் அப்பாவின் மறைவு குறித்தும் அவர் இல்லாத நிலையில் அடைந்த வெற்றி குறித்தும் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஆனந்த விகடனில் சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்ன வரிகள் ஆழமானவை…. “ ஆள் இல்லாத கிரவுண்டில் சிக்சர் அடிச்சது மாதிரி இருக்கு” என்று தன் பட வெற்றியின் போது அப்பா இல்லாததை குறிப்பிட்டிருந்தார்….

ஏதாவது ஒரு சிறு அங்கீகாரம் அல்லது பாராட்டு வந்தாலும் அந்த அதே ஃபீலிங்தான்…

அவர் சிறிய அளவில் பண உதவி செய்து படிக்க வைத்த பிள்ளைகளும் (இப்போது பெரியவர்கள்), எங்கள் வீட்டில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் ( அம்மா கொடுக்கும் தின்பண்டங்களுக்காகவே கட் அடிக்காமல் வந்தவர்கள் பலர்) படித்த பிள்ளைகளில் சிலரும் இன்று தொலைபேசியில் அழைத்து நினைவுகூர்ந்தார்கள்… அப்பா வாழ்கிறார் அவர் அறிந்த பலரின் எண்ணங்களில்…

நன்றி: கார்த்திகைச்செல்வன் முகநூல் பதிவில் இருந்து…

karthigaiselvan recalls memories of his father