கலைஞர் கருணாநிதி மறைந்த 100-வது நாள் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நினைவு மடல்

“தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைந்த 100-வது நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள நினைவு மடல்”

“தமிழகத்தை கொள்ளையர்களிடம் இருந்தும் – இந்தியாவை பாசிச ஆட்சியாளர்களிடம் இருந்தும் தலைவர் கலைஞர் வழியில் ஜனநாயகமுறையில் மீட்க நெஞ்சுயர்த்தி சூளுரைப்போம்!”

நெஞ்சம் மறந்தால்தானே நினைப்பதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இதயத்தில், எண்ணத்தில், உதிரத்தில், உயிர்த்துடிப்பில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தலைவர் கலைஞரை நொடிக்கு நூறுமுறையாவது நினைக்காமல் இருப்பதில்லை. ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயத்துடிப்பும் கலைஞரின் நினைவுகளுடனேயே இயங்கி நீடிக்கிறது.

அவர் உயிருடன் இல்லை என்கிறது இயற்கையின் விதி. எந்த விதியையும் மாற்றுகின்ற வல்லமைமிக்க தலைவராக விளங்கிய கலைஞர் அவர்கள் எங்களுக்குள்ளேதான், எங்களுடனேதான் இருக்கிறார் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகளும் தமிழக மக்களும். அதன் அடையாளம்தான், ஓய்வே எடுக்காமல் உழைத்த தலைவர், தன் அண்ணனிடம் இரவலாக வாங்கிய இதயத்தை, தான் கொடுத்த வாக்குறுதிப்படி திருப்பிக்கொடுக்கும் கடமையுடன் வங்கக் கடற்கரையில் பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் அவர் அருகிலேயே ஓய்வெடுக்கும் கலைஞருக்கு நாள்தோறும் அஞ்சலி செலுத்தத் திரண்டு வரும் பொதுமக்களின் அணிவரிசை. ஆகஸ்ட் 7 அன்று நம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு, தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். அவர் நம்மிடையே இல்லாமல் நூறு நாட்கள் கடந்த நிலையிலும் நம் நினைவெல்லாம் அவரே நிறைந்திருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களுக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கக் கூட்டங்கள் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் நடைபெற்றன. ஊடகத்தினர், இலக்கியகர்த்தாக்கள், திரைத்துறையினர், தமிழக அரசியல் தலைவர்கள், அகில இந்திய அரசியல் ஆளுமைகள் என அனைத்துத்துறை வித்தகர்களும் பங்கேற்ற அந்த மாபெரும் நிகழ்வுகளில், பன்முகத்தன்மை வாய்ந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆளுமையையும் ஊற்றெடுத்துப் பெருகிய ஆற்றல்களையும் அவை ஏற்படுத்திய அகன்று விரிந்த தாக்கங்களையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் வியந்து எடுத்துரைத்தபோது, இந்தியத் துணைக்கண்டம் இப்படியொரு தலைவரை இதுவரை கண்டதில்லை என்பது வரலாற்றின் பக்கங்களில் புதிய வரலாறாய்ப் பதிவானது.

தலைமைக் கழகத்தின் புகழ் வணக்கக் கூட்டங்களைத் தொடர்ந்து, கழகத்தின் மாவட்ட-ஒன்றிய-நகர- கிளைக் கழகங்கள் சார்பிலும், கழகத்தின் பல்வேறு அணிகள் சார்பிலும் புகழ் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன; அனைவரையும் ஈர்த்து இணைத்துக் கொண்டே வருகின்றன.அரசியல் தளத்தில் மட்டுமின்றி அனைத்துத் தளங்களிலும் உள்ள வல்லுநர்கள் அவர் புகழைப் பாடுகிறார்கள். தலைவர் கலைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் புகழ் வணக்கம் செலுத்தினார்கள். நிர்வாகத்திறன் மிக்க கலைஞரின் அரிய ஆளுமை குறித்து பொறியாளர்கள் புகழ் வணக்கம் செலுத்தினார்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர், மகளிர், மாணவர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், பலதுறைக் கலைஞர்கள் என தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும், சமூக நீதிப் போராளி கலைஞரால் தாங்கள் பெற்ற நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நல் மனதுடன் கட்சி மாச்சரியமின்றி புகழ் வணக்கம் செலுத்தினார்கள். நடுநிலை தவறா தராசு முள்போல செயல்படும் நீதியரசர்களும் தங்கள் துறையில் கலைஞர் நிலைநாட்டிய சமூக நீதியை மனம் திறந்து பேசி புகழ் வணக்கம் செலுத்தியது இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதும், கலைஞரின் புகழ் வணக்க நிகழ்வுகளுக்கு முழுமை சேர்ப்பதுமாக அமைந்தது.

நிகழ்ச்சி நடத்தவோ, கூட்டம் கூட்டவோ வாய்ப்பில்லாத எளிய மக்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு கலைஞர் ஆட்சிக் காலத்தில் கிடைத்த கல்வி, தங்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்பு, தங்கள் குடும்பத்திற்குப் பயன் தந்த திட்டங்கள், தங்கள் தலைமுறைக்கு கலைஞரால் இந்த சமுதாயத்தில் கிடைத்த தனிப்பெரும் தகுதி, வாழ்நாளெல்லாம் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் போற்றிப் பாதுகாத்திட அவர் காலமெல்லாம் பட்டபாடு – அதில் பெற்ற அசைக்கமுடியாத வெற்றி ஆகியவற்றை நன்றியுடன் நினைத்துப் பார்த்து, வங்கக் கடற்கரையில் உள்ள கலைஞரின் ஓய்விடத்தில் வற்றாத கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்; பூத்தூவி புகழ் சேர்க்கிறார்கள். கலைஞரே இந்தத் தமிழ்க் குலத்தின் முற்றி முதிர்ந்த முதல்வர் என்று சொல்லாமல் சொல்வதுபோல, பச்சிளங்குழந்தைகளை அவர் நினைவிடத்தில் படுக்க வைத்து எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார்கள்.

நாத்திகர், ஆத்திகர், அனைத்து மதத்தினர் என எல்லோரும் கூடி, அவரவருக்குரிய முறைகளில் தங்கள் இதயத்து நன்றியை அஞ்சலியாக செலுத்தி வருகிறார்கள். 95 வயது வரை வாழ்ந்து அதில் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வைக் கொண்டு, அரை நூற்றாண்டுக் காலம் கழகத்தின் ஒப்பிலாத தலைவராக விளங்கி, தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று அதிக காலம் ஆட்சி செய்து அரிய பல சாதனைகளை செய்த தலைவரின் பெருமையை இளைஞர்களும் பெண்களும் பொதுமக்களும் பேசுகிறார்கள். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதுபோல, தலைவர் கலைஞர் அவர்களின் நினைவின் அருமையை தற்கால நிலையில் அவருக்காக நடைபெறும் நிகழ்வுகளில் உணர முடிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியையும் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் இரு பத்து (two decades) ஆண்டுகளையும் தன் பொதுவாழ்வினாலும் போராட்டங்களாலும் பொழுதளந்த மாபெரும் தலைவரின் திட்டங்களும் சாதனைகளும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பேசப்படுபவை என்பதால்தான், அவர் மறைந்து 100 நாட்களாகியும் புகழ் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தலைவர் கலைஞரின் நினைவுகளில் மெய்மறந்து நீந்துவதுடன் நம் பயணம் நின்று போய்விடுவதில்லை. கலைஞரின் பேராற்றல் என்பது நெருக்கடி மிகுந்த சூழல்களில் நெருப்பாற்றைக் கடக்கும் வகையில் அவர் சளைக்காமல் மேற்கொண்ட எதிர்நீச்சல்தான். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் கலைஞரின் துணிவும் வலிவும் வியூகமும்தான் தி.மு.க.கழகம் எனும் கோட்டையைக் கட்டிக் காத்தன. தேர்தல் களத்தில் வெற்றிகளைக் குவித்து கோட்டையில் ஆட்சி செலுத்தக் காரணமாயின. அதன்காரணமாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தந்தன. தோல்விகள் ஏற்பட்ட காலத்திலும் துவண்டு போகாத திட மனதுடன், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிடும் வலிமையைத் தந்தன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அரசியலுக்கே வழிகாட்டும் ஆற்றல் கொண்டவராகத் தலைவர் கலைஞரை அடையாளப்படுத்தின.

தன் உயரம் தனக்குத் தெரியும் எனத் தன்னடக்கத்துடன் அறிவித்த தலைவர் கலைஞர் அவர்கள்தான், இந்தியாவின் மிகப் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய தேசிய அளவிலான கூட்டணிகளை உருவாக்கியவர்.

பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்தவர். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற வடிவமைப்பை உருவாக்கிடச் செய்து, அதன் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்தின் நலன்களையும் பாதுகாத்தவர். அவர் வகுத்துத் தந்த வழிமுறை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. 1988ஆம் ஆண்டு அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு சென்னையில் தலைவர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகம் வியந்த பிரம்மாண்டமான பேரணியுடன் தொடங்கப்பட்ட தேசிய முன்னணிதான், 1989 தேர்தலில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வழி வகுத்தது. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அதே ஆந்திர மாநிலத்தின் இன்றைய முதல்வரும் என்.டி.ஆர். அவர்களின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு அவர்கள், இந்தியாவை ஆளும் மதவெறி-பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கும் நல்லெண்ணத்துடன், மதச்சார்பற்ற வலுவான அணி அமைக்கும் முயற்சியாகத் தலைவர் கலைஞரின் மகனும் உங்களில் ஒருவனுமான என்னைச் சந்தித்தார். அந்த நல் முயற்சிக்கு கழகம் விரும்பித் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துள்ளேன். அதே எண்ணத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செலயாளர் சீதாராம் யெச்சூரி அவர்களும் கழகத் தலைவரான என்னை சந்தித்து மதவெறி சக்திக்கு எதிரான மதநல்லிணக்க-சமயச்சார்பற்ற அணியை தேசிய அளவில் ஒருங்கிணைப்பது குறித்து உரையாடினார்.

நாட்டின் எதிர்காலத்தைக் காக்கும் நல்ல சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன.

அதற்குக் கட்டியம் கூறும் வகையில்தான், நவம்பர் 8ந் தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நகரில் தி.மு.கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அது வெறும் பொதுக்கூட்டம் அல்ல. போர்க்களத்திற்கான பாடிவீடு. அதனால்தான், ஜனநாயக அறப்போர் என்ற தலைப்புடன் கொள்ளைக்கார அ.தி.மு.க. ஆட்சியையும், பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் அதிகாரத்திலிருந்து அகற்றிடும் இலக்குடன் கழகத்தின் படைவரிசை அங்கே திரண்டது. தமிழ்நாடு முழுவதும் படையணி திரட்டப்படும். இந்திய அளவில் அது வலிமைப்படுத்தப்படும். மக்கள் விரோத ஆட்சி செய்யும் இந்த இரு பிரிவினரையும், அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்போரையும் இந்த ஜனநாயகப் படை எதிர்கொள்ளும்.

தமிழ்நாடு அரசு இன்று பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிகிறது. இந்தியா மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களின் கொடூரப் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த இரண்டையும் ஜனநாயக வழியில் அகற்றுவதும் விரட்டுவதும்தான் நமது ஒரே இலக்கு. தலைவர் கலைஞரின் புகழ் வணக்க நிகழ்வுகளில் நாம் அவரது நினைவுகளில் நீந்துவதுபோலவே, அவர் கற்றுத்தந்த எதிர்நீச்சலையும் மேற்கொள்வோம். அவரிடம் பயின்ற கனிவும் துணிவும் பணிவும் வலிவும் பொலிவும் குறிதவறாத வியூகமும் மிக்க உழைப்பை எந்நாளும் வழங்குவோம்! தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் ஒரேநோக்குடன் துணை நிற்கும் தோழமை சக்திகளை அரவணைத்துக் களம் காண்போம்!

மாநில உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு, அரசுக் கருவூலத்தைக் கொள்ளையடித்து, வருமானம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியையும் -பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை வஞ்சித்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து, அமைதியைக் கெடுக்கும் மதவெறியுடன் கோலோச்சும் பாசிச பா.ஜ.க ஆட்சியையும் வீழ்த்திட, தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் நூறாவது நாளில் நெஞ்சுயர்த்திச் சூளுரைப்போம்! அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி, தமிழுலகம் மகிழ, வென்று காட்டுவோம்!

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்.
திருவள்ளுவர் ஆண்டு 2049, ஐப்பசி – 28.
14-11-2018.