திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15 மாத இடைவெளிக்கு பின் தனது சிஐடி காலனி வீட்டுக்கு சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார். அதற்கு முன்னர் வரை அடிக்கடி சிறு சிறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனது தினசரி நடவடிக்கைகளையோ, அறிக்கை விடுவதையோ கைவிட்டதில்லை.
தினமும் காலை சிஐடி காலனி வீட்டிலிருந்து கிளம்பி முரசொலி அலுவலகம் செல்லும் கருணாநிதி பின்னர் அறிவாலயம் வருவார். இல்லையென்றால் கோபாலபுரம் செல்வார். பின்னர் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் அறிவாலயம் வரும் அவர் மாலை 6-30 மணிக்கு மேல் சிஐடி காலனி வீட்டுக்கு திரும்பச் செல்வார்.
தினசரி நடவடிக்கைகள் அவரது உடல் நிலைகுறைபாடு காரணமாக மாறிப்போனது. காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பினார். பின்னர் உடல்நிலை காரணமாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கினார்.
அதன் பின்னர் கனிமொழி, ராஜாத்தி அம்மாள் கேட்டுக்கொண்டும் கோபாலபுரத்திலிருந்து அவரை வெளியே எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருகிறது. அவர் தற்போது அனைவரையும் அடையாளம் கண்டு பேசுகிறார். அவரை பலரும் சென்று பார்த்து வருகின்றனர்.
நேற்று பொங்கலை முன்னிட்டு தொண்டர்களை சந்திப்பதாக இருந்தார். ஆனால் தொற்று ஏற்படும் என்பதால் தொண்டர்களை தனது இல்ல வாயிலிலிருந்து பார்த்து கையசைத்ததோடு நிறுத்திக்கொண்டார்.
இந்நிலையில் இன்று நல்ல நாள் என்பதால் கருணாநிதி தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கருணாநிதி கடந்த 15 மாதத்துக்கு பின் தனது சிஐடி காலனி இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சிஐடி காலனி இல்லத்தில் அவரை கனிமொழி, ராஜாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.