முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கருணாஸ் சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார்.
இரட்டை இலை சின்னத்தில் வென்று தற்போது அரசை விமர்சித்து வருவதால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கடிதத்தை ஏற்ற சபாநாயகர் தனபால் புகார் குறித்து கருணாஸிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருணாஸ் மட்டுமல்லாமல் டி.டி.வி தினகரன் அணியில் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கும் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி,
கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வம்,
தொழில் நுட்பப்பிரிவு அணி செயலாளரும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான பிரபு ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர்களுக்கு விதி எண் 6-ன் கீழ் சபாநாயகர் தரப்பிலிருந்து குறித்த கால இடைவெளிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொருத்து சபாநாயகர் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது