காஷ்மீரில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில் அங்கு வாழும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல உதவ வேண்டும் என்று
ஐக்கிய நாடுகள் சபைக்கு நோபல் பரிசு வென்றவரும், கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு,
அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியில் இருந்து காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார்,
பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், 40 நாட்களுக்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடங்களை மாநில நிர்வாகம் திறந்தபோதிலும் அங்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தொடர்ந்து மறுத்துவருகின்றனர்
இதனால் பள்ளிக்கூடங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்கள் வரவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன
இந்நிலையில், பாகிஸ்தானைத் சேர்ந்தவரும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடிவருவருமாம்,
நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய் காஷ்மீர் குழந்தைகள் பள்ளி செல்ல உதவ வேண்டும் என்று ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மலாலா இதுதொடர்பாக ட்விட்டரில் விடுத்த வேண்டுகோளில் கூறுகையில், ” ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், காஷ்மீரில் அமைதி நிலைநாட்ட முயற்சி எடுங்கள்.
காஷ்மீர் மக்களின் குரல்களைக் கேட்டு, அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி செல்வதற்கு உதவி செய்யுங்கள்.
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் உள்ள குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதும் பெண் குழந்தைகள் அச்சப்பட்டு வீட்டை விட்டு வெளியேறவில்லை என்பதும் ஆழ்ந்த கவலையளிக்கிறது
காஷ்மீரில் வாழ்ந்து வரும் பெண் குழந்தைகளின் குரல்களை நேரடியாக கேட்க விரும்புகிறேன். அங்கு தகவல் தொடர்பு முடங்கி இருப்பதால், அங்கிருக்கும் பலரிடம் இருந்து அவர்களின் கதைகளை அறிய அதிகமான சிரத்தை எடுக்கிறேன்.
உலகின் தொடர்பிலிருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டுள்ளது, அவர்கள் எழுப்பும் குரல்களை கேட்க முடியவில்லை.#லெட்காஷ்மீர்ஸ்பீக்” என்று தெரிவித்துள்ளார்.
41-வது நாளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இன்டரநெட் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.
லேண்ட்லைன் தொலைபேசிகள் செயல்பட்டபோதிலும், செல்போனில் வாய்ஸ்கால்கள் குப்வாரா, ஹான்ட்வாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே இயங்குகின்றன.
பிடிஐ