காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது.

அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் போது விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடக்காத வகையில், அரசியல் தலைவர்கள் பலரை வீட்டுக் காவலில் காஷ்மீர் நிர்வாகம் வைத்துள்ளது.

இந்நிலையில் வீட்டுக் காவலில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரைச் சந்திக்க அனுமதி கோரியும், ஆட்கொணர்வு மனுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்ரீநகருக்குச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகாமியைச் சந்திக்க சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்தது.

இதன்படி கடந்த மாதம் 28-ம் தேதி ஸ்ரீநகர் சென்று தாரிகாமியைச் சந்தித்த சீதாராம் யெச்சூரி அவரின் உடல்நலம் குறித்த அறிக்கையை பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில் தாரிகாமிக்கு ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு இன்னும் சிறந்த சிகிச்சை தேவைப்படுகிறது, அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.

இதனை ஏற்று தாரிகாமிக்கு எந்தத் தாமதமும் இல்லாமல் டெல்லி எய்ஸ்ம் மருத்துவனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தாரிகாமி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உறவினர் ஒருவரும், மருத்துவர் ஒருவரும், அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் காவலர் ஒருவரும் மருத்துவமனையில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.