முக்கிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க வேண்டும்: 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசும், 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், காஷ்மீர் மக்களை சமூக ரீதியாக ஒதுக்கிவைத்தல், தாக்குதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய செயல்களையும் 11 மாநில அரசுகளும் தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கல்வி, பணி, மற்றும் வியாபாரம் நிமித்தமாக தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனால், காஷ்மீரைச் சேர்ந்த மக்கள், தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களை விட்டு, மீண்டும் காஷ்மிருக்கும் திரும்பினார்கள்.

இந்த சம்பவம் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலையும் ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மேலும், மேகாலயா ஆளுநரும், காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தாரிப் அதீப் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் மக்களுக்கு எதிராக பிஹார், சத்தீஸ்கர், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா,

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்படுகின்றன, அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

ஆதலால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் தாக்குதல்கள், சமூக புறக்கணிப்புகள்,

அச்சுறுத்தல்கள், துரத்தல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ” புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும்,

சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் தாக்குதலை, குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் தடுக்கப் பட வேண்டும்.

காஷ்மீர் மக்கள், சிறுபான்மை மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ள 11 மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

அந்த 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் ஆகியோர் மனுதாரர்கள் அளிக்கும் புகார்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

பசு குண்டர்களைத் தடுக்க அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான போலீஸாரே, காஷ்மீர் மக்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளையும் விசாரிக்க வேண்டும், அதற்குரிய பொறுப்பாவார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விளம்பரங்களை அளித்து, அந்தந்த பொறுப்புள்ள அதிகாரிகள் காஷ்மீர் மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இது தொடர்பாக 11 மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிடுகிறோம். ” எனத் தெரிவித்தனர்.

அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.