காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
‘காஷ்மீரிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும். காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்’ என்றுமேகாலயா ஆளுநர் தத்தகதா ராய் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஒரு அங்கமாக காஷ்மீர் இருக்கவேண்டும். ஆனால், காஷ்மீரிகள் நாட்டின் ஒரு அங்கமாக இருக்ககூடாது என்று சிலர் நினைக்கின்றனர். இந்த முரண்பட்ட எண்ணம், வேதனையாக இருக்கிறது.
குஜராத்தில் 182 மீட்டர் உயரத்துக்கு ‘ஒற்றுமை சிலை’ என்ற பெயரில் சர்தார் வல்லபாய் படேல் சிலை வைக்கப்பட்டுள்ளது. (பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர் படேல்.)
காஷ்மீரிகளுக்கு இந்தியாவில் இடமில்லை என்று நினைப்பவர்களையும், மேகாலயா ஆளுநரையும் குஜராத்தில் இருந்து நாட்டை ஒருமைப்படுத்திய அந்த சர்தார் வல்லபாய் படேல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இவ்வாறு ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியுள்ளார்.