காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130 கோடி இந்தியர்களின் விருப்பம்: பிரதமர் மோடி

தேசத்தில் உள்ள 130 கோடி மக்களின் விருப்பமாகவே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெறப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகாரஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் இப்போதே பாஜக தீவிரமாக இறங்கிவிட்டது.

நாஸிக் நகரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த காலங்களில் அரசியல் நிலைத்தன்மையற்று இருந்தது. ஆனால், பாஜக அரசு அமைந்து,

முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் வந்து 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை வழங்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தையும், அரசியலமைப்பு 370 பிரிவையும் நீக்கியது 130 கோடி மக்களின் விருப்பமாகத்தான் செய்தோம்.

காஷ்மீர் மக்களை வன்முறை, தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகிய சுழற்சியில் இருந்து விடுவிக்க எடுக்கப்பட்ட முடிவுதான்.

மத்தியில் 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் தவறான கொள்கையால் 42ஆயிரம் மக்கள் இதுவரை காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு தேசியநலன் கருதி ஆதரவு அளிப்பதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் நலனுக்காக கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

காஷ்மீரை நாட்டுடன் முழுமையாக இணைக்கும் போது, காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை மற்ற நாடுகள் ஆயுதமாக இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தின.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், சரத்பவார் செயல்பட்டதையும், பேசியதையும் நினைத்து வருந்துகிறேன்.

அவரைப்போன்ற அனுபவம்மிக்க தலைவர் வாக்குக்காக தவறான கருத்துக்களை தெரிவித்தபோது வேதனை அடைந்தேன்.

அண்டை நாட்டை விரும்புகிறேன் என்று சரத்பவார் பேசினார். தீவிரவாதம் எங்கிருந்து உற்பத்தியாகிறது ஒவ்வொருவருக்கும் தெரியும்

பட்நாவிஸ் நிலையான அரசை அளித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியுள்ளார், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளார்.

குஜராத் மக்கள் எனக்கு நீண்டநாள் ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்கினார்கள். அதன்அடிப்படையில் நான் மிகுந்த அர்பணிப்புடன் ஆத்மஉணர்வுடன் பணியாற்றினேன்.

பட்நாவிஸும் அதேபோன்று, என்னைப்போல் பணியாற்றுகிறார். அவரும் அதற்கான பலனை அடைவார்.

60 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகமான பெரும்பான்மையுடன் ஒரு அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மக்கள் இந்த அரசுக்கு வலிமையை அளித்து,

சிறப்பாக பணியாற்ற உரிமையை வழங்கியுள்ளார்கள்.100 நாட்களில் அரசின் செயல்பாட்டை பார்த்திருப்பீர்கள். மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறீர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

பிடிஐ