கலவர பூமியான காசியாபாத்: பேரணியாக வந்தவிவசாயிகள் மீது கண்ணீர் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கலைப்பு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகளுக்கு காசியாபாத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டு, அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், மின்கட்டணத்தில் சலுகை செய்ய வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய விவசாயிகள் அமைப்பு(பிகேயு) சார்பில் ஹரித்துவாரில் இருந்து கடந்த 23-ம் தேதி டெல்லிக்குப் பேரணியாக விவசாயிகள் புறப்பட்டனர்.

டிராக்டரிலும், பஸ்களிலும், இரு சக்கர வாகனங்களிலும், சிறிய வாகனங்களிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் புறப்பட்டு டெல்லியை நோக்கி வருகின்றனர். இந்நிலையில், காசியாபாத், டெல்லி-உத்தரப் பிரதேசம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றபோது, போலீஸார் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

டெல்லி செல்லக்கூடாது திரும்பிச் செல்ல வேண்டும் என்று விவசாயிகளிடம் போலீஸார் தெரிவித்தனர். மேலும், டெல்லி, கிழக்கு டெல்லி பகுதியில் அடுத்த ஒரு வாரத்துக்கு அதாவது 8-ம் தேதி வரையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதையும் போலீஸார் எடுத்துக் கூறினார்கள்.

இதனால் டெல்லியின் பிரீத் விஹார், ஜகத்புரி, சகாபூர், மதுவிகார், காஜிப்பூர், மயூர் விகார், மந்தாலி, பாண்டவ் நகர், கல்யான்பூரி, நியூ அசோக் நகர் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்குள் செல்ல முடியாது என்று விவசாயிகள் விளக்கம் அளித்தனர்.

ஆனால், போலீஸாரின் வார்த்தைகளை மீறி விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றனர். இதனால், விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்றப்பட்டது.

இதையடுத்து, விவசாயிகள் கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்,

மேலும்,விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அவர்களைக் கலைத்தனர்.

இதனால், அந்த டெல்லி-உத்தரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலை போர்க்களம் போல் காட்சியளித்தது.

இது தொடர்பாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நரேஷ் திகாய்த் கூறுகையில், ”எதற்காக எங்களை போலீஸார் இந்த தேசியநெடுஞ்சாலையோடு தடுத்து நிறுத்துகிறார்கள்.

இதுவரை நாங்கள் கடந்து வந்த பகுதியில் ஏதேனும் வன்முறை நிகழ்ந்திருக்கிறதா? அமைதியான முறையில்தான் வந்தோம்.

நாங்கள் எங்கள் பிரச்சினைகளை எங்கள் அரசிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது.

வங்களாதேசம் அரசிடமா அல்லது பாகிஸ்தான் அரசிடமா தெரிவிக்க முடியும்” என்று கேட்டார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

”டெல்லி அனைவருக்கும் சொந்தமானது. விவசாயிகள் பேரணியாக டெல்லியை நோக்கி வருகிறார்கள் என்றால் அவர்களை அனுமதிக்க வேண்டும்.

ஏன் அவர்களை அனுமதிக்க மத்திய அரசு மறுக்கிறது. இது தவறான போக்கு. விவசாயிகளை அனுமதிக்கும் அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும்” என கேஜ்ரிவால் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை…

சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா!

Recent Posts