மிதக்குது கேரளா… மீள முடியாத மக்கள்!

கேரளாவில் பலத்த மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. வயநாடு பகுதிக்கு வரும் 14ம் தேதி வரை, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமடைந்த நிலையில், முதல்வர் பினராயி, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை இன்று ஆய்வு செய்தார். கேரள மாநிலத்தில், கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருவதால், எர்ணாகுளம், கோழிக்கோடு, இடுக்கி, கண்ணூர், மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 2 நாட்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், பெரியாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. பெரியாறு நீர்வழிப்பகுதியில் வசிக்கும், 200 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணையின் 5 மதகுகளும், 40 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்டு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், கொச்சி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக தேசியப்  பேரிடர் மேலாண்மைப் படையின், தலா 45 பேர் கொண்ட 14 குழுக்கள், ராணுவத்தினர், கடற்படையினர்,  கடலோரக் காவல் படை யினர் அடங்கிய 8 குழுக்களும் மாநிலத்தில் மீட்புப்  பணியில் ஈடுபட்டுள்ளன. மீட்கப்பட்டவர் களைத் தங்க வைப்பதற்காக கேரளா  முழுவதும் 439 முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு 24 மணிநேரமும்  உணவு, குடிநீர், மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு  தெரிவித்துள்ளது. இதையடுத்து, பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு, தாழ்வான பகுதிகளில் இருந்த சுமார் 4,000 பேரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். மழை, வெள்ளத்தால் 53,501 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்திற்கு வரும் ஆக. 14ம் தேதி வரை, வெள்ள அபாய எச்சரிக்கை (ரெட் அலர்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேரள சுற்றுலா துறை அறிவுறுத்தி உள்ளது. கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில், தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

 ராஜ்நாத் வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘கேரள மாநில வெள்ள பாதிப்புக்கு உதவ மத்திய அரசு அனைத்துவிதத்திலும் தயாராக உள்ளது’ என்றார். மேலும், வெள்ள பாதிப்பை பார்வையிட, நாளை (ஞாயிற்றுக்கிழமை) கேரளா செல்ல இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் ஹெலிக்காப்டர் மூலம் திருவனந்தபுரம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது, முதல்வர் பினராயி விஜயன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தை தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கொச்சி ஏர்போர்ட் மூடல்

கனமழை மழையால் கொச்சி ஏர்போர்ட் செல்லும் சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே, வானிலை மோசமாக இருந்ததால் கொச்சி ஏர்போர்ட்டில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், விமான சேவை துவங்கப்பட்டது. இன்றைய நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொச்சி ஏர்போர்ட் மூடப்பட்டுள்ளது. 

நிவாரண உதவி தேவை

கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெள்ள பாதிப்பு குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து, வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்குவதாக உறுதி அளித்தார். ஏற்கனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.5 கோடி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். கேரள ஆளுநர் சதாசிவம், சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் ஏற்பாடு  செய்திருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார். மேலும், முதல்வர் நிவாரண நிதிக்கு தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாக  அறிவித்தார். இதேபோல் மக்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை நிவாரண  நிதிக்கு வழங்க ஆளுநர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

2,669 மி.மீட்டர் மழை

கேரள மாநிலம் வயநாட்டில், இதுவரை 2,669 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் 36.6 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தின்ல அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மீட்புப்பணி மற்றும் உதவிக்காக 9747707079, 9746239313, 9745166864 என்ற எண்களை தொடர்பு கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

kerala drowned in flood water